சென்னை: விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ-க்களான முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இவர்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்று பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அதிமுக கொறடாவான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘சம்பந்தப்பட்ட எம்எல்ஏ-க்கள் இருவரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி அளிக்கப்பட்ட மனு மீதான நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது அவர்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்று இருப்பது சட்டவிரோதமானது.
பேரவைத் தலைவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இயந்திரத்தனமாக முடிவு எடுத்துள்ளதால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும்.
இந்த மனு மீது இறுதிமுடிவு எடுக்கும் வரை விராலிமலை, கரூர் தொகுதிகளை காலியானதாக அறிவித்து இடைத் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் சட்டப்பேரவைச் செயலர் மற்றும் சம்பந்தப்பட்ட எம்எல்ஏ-க்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
மேலும், ஏற்கெனவே 4 அதிமுக எம்எல்ஏ-க்களின் ராஜினாமாவை பேரவைத் தலைவர் ஏற்றுக் கொண்டதை எதிர்த்த வழக்குகளுடன் இந்த வழக்கும் சேர்த்து விசாரி்க்கப்படும் என தெரிவித்து விசாரணையை ஜூலை 22-க்கு தள்ளி வைத்தனர்.