சிலிண்டர் பற்றாக்குறை: கோவை ஓட்டல்களில் தினசரி உணவு வகைகள் குறைப்பு

சில உணவகங்கள், தேநீர் கடைகள் தற்காலிக மூடல்
சிலிண்டர் பற்றாக்குறை:  கோவை ஓட்டல்களில் தினசரி உணவு வகைகள் குறைப்பு
Updated on
2 min read

கோவை: வர்த்தக சிலிண்டர்கள் சப்ளை நிறுத்தத்தால், கோவை ஓட்டல்களில் தினசரி உணவு வகைகளின் தயாரிப்பு குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், சில ஓட்டல்கள், தேநீர் கடைகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுவதால், சர்வதேச வர்த்தகத்திலும் கடும் பாதிப்பு ஏற்பட்டு வர்த்தக சிலிண்டருக்கு தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. கோவையிலும் இதன் தாக்கம் தொடங்கியுள்ளது.

கோவையில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேக்கிரிகள், தேநீர் கடைகள் உள்ளன. 300-க்கும் மேற்பட்ட பெரிய வகை ஓட்டல்கள் உள்ளன. சிறிய மற்றும் நடுத்தர ஓட்டல்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இங்கு எல்.பி.ஜி. காஸ் சிலிண்டர் தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டால், கோவையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பேக்கிரிகள், டீக்கடைகளில் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், கோவையில் உள்ள பிரபல உணவகங்களில் தினசரி விற்பனைக்கு தயாரிக்கப்படும் உணவு மெனுப் பட்டியலும் குறைக்கப்பட்டுள்ளது. சில சிறிய ஓட்டல்கள், பேக்கிரிகள் மற்றும் தேநீர் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கோவையில் இயங்கி வரும் பெரிய ஓட்டல்களின் நிர்வாகிகள் இன்று (மார்ச் 10) சிலர் கூறும்போது, ‘‘எங்களது ஓட்டல்களில் தினமும் 300-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும். தற்போது இதன் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

ஆனியன் ஊத்தாப்பம், ரவா ரோஸ்ட், பஜ்ஜி, போண்டா, புரோட்டா, காலி பிளவர் ரோஸ்ட், தந்தூரி, சைனீஸ் உணவுகள் என காஸ் அதிகம் பயன்படுத்தி தயாரிக்கக்கூடிய உணவு வகைகளின் தயாரிப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இட்லி, தோசை, பூரி வகைகள் உள்ளிட்ட சில வகை உணவுகளின் சேவை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன’’என்றனர்.

கோவை மாவட்ட ஹோட்டலியர் சங்கத்தின் செயலாளர் பாலா கூறும்போது, ‘‘கோவையில் வர்த்தக சிலிண்டர் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 5 முதல் 10 வர்த்தக சிலிண்டர்கள் ஓட்டல்களுக்கு தேவைப்படும். ஆனால், இன்று ஒரு சிலிண்டர் கூட எடுக்க முடியாத நிலை உள்ளது. தற்போது இருக்கும் இருப்பை வைத்து ஓரிரு நாட்களை ஓட்டிவிடலாம். இதனால் தினசரி உணவு உற்பத்தி முறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதோடு, வெளியே உணவு ஆர்டர் எதுவும் எடுக்க முடியாத சூழல் உள்ளது.

இதனால் வேறு வழியின்றி விறகுக்கட்டைகளை பயன்படுத்தி அடுப்புகளை எரித்து உணவு சமைக்கலாமா? என ஆலோசித்து வருகிறோம். ஒரு ஹோட்டலில் 300-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் உற்பத்தி செய்தால், தற்போது 30 முதல் 40 வகையான உணவுகளை மட்டுமே தயாரிக்கவும், முக்கிய நேரத்தில் மட்டுமே விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவையில் நிறைய ஓட்டல்கள் மூடப்பட்டு விட்டன. இதனால் வெளியூர்களில் தங்கி வசிப்பவர்கள், விஷேச நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். வேலையாட்களுக்கும் வேலையில்லாததால் ஊதியம் குறைந்து பாதிக்கப்படும். நாங்கள் எங்கள் சங்கத்தின் மூலம் முதல்வர், மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தி வருகிறோம்’’ என்றார்.

கோவையைச் சேர்ந்த காஸ் சிலிண்டர் ஏஜென்சி மற்றும் விநியோக ஊழியர்கள் கூறும்போது, ‘‘19 கிலோ வணிக சிலிண்டர் வணிக இடங்களுக்கு வழங்கப்படுகின்றன. ஒரு சிலிண்டரின் விலை ரூ.1,700 வரை வருகிறது.

கடந்த சில நாட்களாக வாடிக்கையாளர்களுக்கு வணிக சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளன. வீட்டு உபயோக சிலிண்டருக்கு தட்டுப்பாடு இல்லை என்றாலும், அதற்கு முன்பதிவு செய்வது தற்போது அதிகரித்துள்ளது. நாளொன்றுக்கு முன்பு 300 முதல் 400 அழைப்புகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து முன்பதிவுக்கு வந்தது. தற்போது, நாளொன்றுக்கு ரூ.500 முதல் 600 அழைப்புகள் முன்பதிவுக்கு வருகின்றன” என்றனர்.

சிலிண்டர் பற்றாக்குறை:  கோவை ஓட்டல்களில் தினசரி உணவு வகைகள் குறைப்பு
நாடு முழுவதும் வர்த்தக எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: ஓட்டல்கள், உணவகங்கள் கடும் பாதிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in