நாடு முழுவதும் வர்த்தக எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: ஓட்டல்கள், உணவகங்கள் கடும் பாதிப்பு

நாடு முழுவதும் வர்த்தக எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு:  ஓட்டல்கள், உணவகங்கள் கடும் பாதிப்பு
Updated on
4 min read

புதுடெல்லி: வர்த்தக எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஓட்டல்களில் உணவு வகைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. சில நாட்களுக்கான சிலிண்டர்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளதால், மிகுந்த நெருக்கடியை உணர்வதாக ஓட்டல்கள் நிர்வாகங்கள் பலவும் கவலை தெரிவித்துள்ளன. பல இடங்களில் ஓட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன.

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. இதையடுத்து, ஈரான் தரப்பில் பதில் தாக்குதல் தொடங்கியது. இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், இதன் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக சரக்கு கப்பல்கள் செல்வது பாதிக்கப்பட்டுள்ளதால் நிலைமை மிகவும் மோசடைந்துள்ளது.

இந்தியா தினசரி பயன்படுத்தும் 195 மில்லியன் ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் (mmscmd) எரிவாயுவில் சுமார் பாதியை இறக்குமதி செய்கிறது. ஹோர்முஸ் நீரிணை மூடக்கப்படுவதற்கு முன்பு, மத்திய கிழக்கிலிருந்து இந்தியா தினசரி சுமார் 60 mmscmd எரிவாயுவைப் பெற்று வந்தது.

இந்நிலையில், இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகம் தொடர்பாக அரசு தரப்பில் நேற்று (திங்கள்கிழமை) வழங்கப்பட்ட வழிகாட்டுதலில், ‘‘எரிவாயு கிடைக்கும் அளவைப் பொறுத்து, கடந்த ஆறு மாத சராசரி பயன்பாட்டின் அடிப்படையில் முக்கிய துறைகளுக்கு அளவான விநியோகம் செய்யப்படும். முன்னுரிமை அடிப்படையில், முதலில் வீடுகளுக்கும் போக்குவரத்து எரிபொருளாக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கும் 100% இயற்கை எரிவாயு வழங்கப்படும். உற்பத்தி துறை மற்றும் பிற தொழில்துறை பயனாளர்களுக்கு 80% எல்பிஜி விநியோகிக்கப்படும். சிறு தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சுமார் 80% அளவிலேயே எரிவாயு விநியோகிக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களை நம்பி உணவகங்கள் இருப்பதால் தற்போது அவற்றின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு நகரங்களில் ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள், உணவு வகைகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளன. அதிக எரிபொருள் தேவைப்படும் பூரி, ஃபிரைட் ரைஸ், சைட் டிஷ்சஸ் போன்ற உணவுகளை மெனுவில் இருந்து தற்காலிகமாக நீக்கி இருப்பதாக பல்வேறு உணவகங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, பெங்களூரு, சென்னை, டெல்லி, நோய்டா உள்ளிட்ட நகரங்களில் 100-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட உணவகம் ஒன்றின் நிறுவனர், “எங்களிடம் எல்பிஜி கையிருப்பு இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே உள்ளது. அவசர திட்டங்களை ஆய்வு செய்து வருகிறோம். எரிவாயுவை சேமிக்க முயற்சி செய்து வருகிறோம். சில கிளைகளில் இன்டக்‌ஷன் அடுப்புகளையும் அமைத்து வருகிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள ‘உடுப்பி ஃபுட் ஹப்’ உணவகங்களை நடத்தும் மனீஷ் வி.ஷெட்டி, “எங்கள் ஒரு உணவகத்துக்கு இன்று எரிவாயு சிலிண்டர் கிடைக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக பழைய விற்பனையாளர் ஒருவர் உதவினார்,” என்று கூறியுள்ளார்.

பெங்களூரு ஹோட்டல் சங்க செயலாளர் வீரேந்திர காமத், ‘‘பாதுகாப்பு காரணங்களால் பல உணவகங்கள் எல்பிஜி சிலிண்டர்களை அதிகமாக சேமித்து வைப்பதில்லை. அவை அடிக்கடி மாற்றி வழங்கப்படுவதையே நம்பி செயல்படுகின்றன’’ என குறிப்பிட்டுள்ளார்.

“இது மிகவும் கவலைக்கிடமான நிலை. பல எரிவாயு நிறுவனங்கள் விநியோகத்தை நிறுத்திவிட்டன. கையிருப்பில் எரிவாயு வைத்துள்ள உணவகங்களுக்கும் அது ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் தீர்ந்து போகும் அபாயம் இருக்கிறது” என்று தேசிய உணவக சங்கத்தின் (NRAI) பெங்களூரு பிரிவு உறுப்பினர் ஆனந்த் நாராயண் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு ஓட்டல் சங்கத்தின் கவுரவத் தலைவர் பி.சி.ராவ், “எரிவாயு இருக்கும் வரை ஹோட்டல்கள் இயங்கும். கிடைக்கவில்லை என்றால் தானாகவே மூட வேண்டிய நிலை வரும். கடைசி துளி எரிவாயு இருக்கும் வரை நாங்கள் சமைத்து வழங்குவோம்,” என கூறியுள்ளார்.

தமிழகத்திலும் வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. எல்பிஜி கையிருப்பு இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மட்டுமே இருக்கும் என பெரும்பாலான ஓட்டல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஒரு பிரபல உணவக சங்கத்தின் தலைவர் கூறுகையில், “எல்பிஜி பயன்பாட்டை குறைத்து வருகிறோம். உணவு வகைகளின் எண்ணிக்கையையும் குறைத்துள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள ‘ஸ்ரீ ஆனந்தாஸ் உணவகமும் வர்த்தக எல்பிஜி சிலிண்டர் பற்றாக்குறையால் மெனுவில் உணவு வகைகளை மிகவும் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதனிடையே, வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு ஓட்டல் சங்கம், மத்திய அரசுக்கு கடந்த 7-ம் தேதி எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

தேசிய உணவக சங்கத்தின் (NRAI) அறங்காவலர் அனுராக் கத்ரியார், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் புரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘இந்தியாவில் உள்ள உணவகங்கள் மற்றும் ஓட்டல்களுக்கு வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர் கிடைப்பது குறித்து பரவலான குழப்பம் நிலவுகிறது. இது தேவையற்ற ஊகங்களுக்கும் பீதிக்கும் வழிவகுக்கிறது.

எனவே, இந்த விஷயத்தில் அரசாங்கத்தின் சரியான நிலைப்பாடு குறித்து தொழில்துறையினருக்கு தெரிவிக்குமாறு கோருகிறோம். அரசாங்கத்தின் தெளிவான அறிக்கை, இந்த சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான திட்டமிடலுக்கு உதவும்.

இது ஓர் உலகளாவிய நெருக்கடி என்பதை நாங்கள் முழுமையாக புரிந்து கொள்கிறோம். பொறுப்புள்ள குடிமக்களாக இந்த நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதில் நாங்கள் அரசாங்கத்துடன் நிற்கிறோம். இது தொடர்பாக அரசாங்கத்திடம் இருந்து தெளிவான கொள்கை மற்றும் வழிகாட்டுதல் அறிக்கையை மட்டுமே நாங்கள் கோருகிறோம்’’ என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எம்.வெங்கடசுப்பு கூறும்போது, “இந்தியாவில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், அனைத்து நகரங்களிலும் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகத்தில் பெரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல நகரங்களில் சுத்தமாக சிலிண்டர் விநியோகத்தை நிறுத்திவிட்டனர். இதே நிலை நீடித்தால் தமிழகம் முழுவதும் அடுத்த இரண்டு நாட்களில் ஒரு லட்சம் உணவகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது.

சிலிண்டர்கள் இல்லை என்றால் பெரிய உணவகங்கள் மட்டுமின்றி, சாதாரண தேநீர்க் கடை வரை அனைத்தும் பாதிக்கப்படக்கூடும். தற்போது உணவகங்களில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் எரிவாயுவை உபயோகப்படுத்திடக் கற்றுக்கொண்டுள்ளனர். அவர்களிடம் விறகு அடுப்புகளைப் பயன்படுத்தும் திறன் இல்லை. உணவகங்களில் விறகு அடுப்புகளைப் பயன்படுத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதிப்பதில்லை.

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக விலை உயர்த்தப்பட்டு, எரிவாயு நிறுவனங்கள் அளித்து வந்த தள்ளுபடியும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், ஒரு எரிவாயு சிலிண்டருக்கு சுமார் ரூ.500 வீதம் கூடுதலாகச் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், உணவுப் பொருள்கள் விலை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

​தற்போது ஏற்பட்டுள்ள சிலிண்டர் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு முதற்கட்டமாகப் பலவகை உணவுகள் தயாரிப்பைக் குறைக்கவும், இரண்டாவதாக உணவகங்கள் செயல்படும் நேரத்தைக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளோம். இது சிலிண்டர் பயன்பாட்டைக் குறைக்கும். சிலிண்டர் கிடைக்கவே இல்லை என்றால் உணவகங்களை மூடுவதைத்தவிர வேறு வழியில்லை” என்றார்.

முதல்வர் ஸ்டாலின் கடிதம்:

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், ‘அமெரிக்கா - ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று விரிவாக ஆய்வு செய்தேன். தற்போது பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பையும் அப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் நலனையும் உறுதி செய்திடத் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்திட வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.

இந்தப் போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று வழங்கிட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நடவடிக்கை என்ன?

சமையல் காஸ் தட்டுப்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் தடையின்றி சமையல் காஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்வது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

எஸ்மா சட்டம் அமல்

எல்பிஜி தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தை (எஸ்மா) மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதன்படி எல்பிஜி சிலிண்டர்களை பதுக்கினால் எஸ்மா சட்டத்தின்படி 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

பொதுமக்களுக்கு நியாயமான விலையில் எல்பிஜி கிடைப்பது உறுதி செய்யப்படும். எல்பிஜி விநியோகத்தை மேம்படுத்த அதிதீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும். எல்பிஜி உற்பத்தித் துறையில் வேலைநிறுத்தம் முழுமையாக தடை செய்யப்படும். வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவர் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் வர்த்தக எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு:  ஓட்டல்கள், உணவகங்கள் கடும் பாதிப்பு
சிலிண்டர் தட்டுப்பாடு - ‘தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் உணவகங்கள் மூடப்படும் அபாயம்’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in