

சென்னை: நிலக்கரி இறக்குமதியில் 487 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக தொழிலதிபர் அகமது புகாரிக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த வழக்கில் தொடர்புடைய நான்கு நிறுவனங்களுக்கு எதிரான வழக்கையும் ரத்து செய்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2011- 12 மற்றும் 2014- 15 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே இந்தோனேசியாவில் இருந்து தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலம் அரசுக்கு 487 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக கோஸ்டல் எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்தின் மீதும், அதன் இயக்குநரான அகமது ஏ.ஆர்.புகாரி மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும், அவருக்கு சொந்தமான கோஸ்டல் எனர்ஜென் மற்றும் துபாய், மொரீஷியாஸ் போன்ற அயல்நாட்டுகளில் இயங்கி வந்த நிறுவனங்களுக்கு எதிராகவும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
கடந்த 2018ம் ஆண்டு சிபிஐ பதிவு செய்த இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
இதனிடையே, அகமது புகாரிக்கு எதிராக சிபிஐ பதிவு செய்திருந்த வழக்கை ரத்து செய்து டெல்லி உயர் நீதிமன்றம் 2025ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், அகமது புகாரி மற்றும் 2 நிறுவனங்களுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த சூழலில், 4 நிறுவனங்களுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.ஓம் பிரகாஷ், இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றமும், அமலாக்கத் துறை வழக்கை சென்னை உயர் நீதிமன்றமும் ரத்து செய்துள்ளதால், இந்த நான்கு நிறுவனங்களுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்வதாக தீர்ப்பளித்துள்ளார்.