

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள்
சென்னை: ‘அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜன.3) முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்’ என அமைச்சர்களுடனான சந்திப்புக்குப் பின்னர் ஜாக்டோ-ஜியோ, போட்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புகளான ஜாக்டோ - ஜியோ,போட்டோ - ஜியோ ஆகியவை ஜன.6-ம் தேதி முதல் தொடர்வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கப் போவதாக அறிவித்தன. இதையடுத்து இந்த கூட்டமைப்புகளின் நிர்வாகிகளுடன், டிச.2-ம் தேதி அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதனால் அறிவித்தபடி போராட்டத்தை தொடர்வதாக கூட்டமைப்புகள் தெரிவித்தன.
இந்நிலையில் ஜாக்டோ - ஜியோ மற்றும் போட்டோ - ஜியோ குழுவுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஓய்வூதிய விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் அமைச்சர்கள் குழு எடுத்துரைத்தது. அதேபோல் தங்கள் கோரிக்கைகளையும் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் விரிவாக முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.
கூட்டம் முடிந்த பின்னர்போட்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் அமிர்தகுமார் கூறும்போது, ‘‘தற்போது நடந்தபேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கை ஏற்கப்படுவதாக வும், ஓய்வூதியம் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக புதிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜன.3) வெளியிட உள்ளதாகவும் அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர். முதல்வரின் அறிவிப்பு வெளியானதும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப் போம்’’ என்றார்.
ஜாக்டா - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கு.வெங்கடேசன் கூறும்போது, ‘‘ஊழியர்களின் பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டம் இருக்க வேண்டுமென கோரிக்கை வைத்தோம். நீங்கள் எதிர்பார்க்கும் ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட உள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். முதல்வரின் அறிவிப்பைப் பொறுத்து எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிப்போம்’’ என்றார்.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்? - தமிழகத்தில் தற்போது 9.5 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 1.98 லட்சம் பேர் பழைய ஓய்வூதியத் திட்டத்திலும், மீதமுள்ள 5.32 லட்சம் பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்திலும் உள்ளனர். நடப்பாண்டில் அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு ரூ.91,726 கோடி செலவானது. இந்நிலையில், பழைய ஓய்வூதியத்திட்டம் மீண்டும் அமலானால் அதற்கு பெருமளவு நிதி தேவைப்படும். அதனால் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சில மாற்றங்களுடன் தமிழக அரசு கொண்டுவர இருப்பதாகக் கூறப்படுகிறது.