

படம்: ஜெ.மனோகரன்
கோவை: கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை முதல்வர் விஜய் வரும் 16-ம் தேதி திறந்து வைக்கிறார்.
தமிழக பொதுப்பணித் துறையின் சார்பில், கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் மத்திய பேருந்து நிலையம் எதிரே, சிறைத்துறைக்கு சொந்தமான இடத்தில், 6.98 ஏக்கர் பரப்பளவில், 1 லட்சத்து 98 ஆயிரம் சதுரடியில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் ரூ.300 கோடி மதிப்பில் ‘பெரியார் அறிவுலகம்’ எனப்படும் ‘பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம்’ கட்டப்பட்டுள்ளது. கடந்த 2024-ல் தொடங்கிய இப்பணி தற்போது நிறைவடைந்துள்ளது.
திட்ட மதிப்பில், ரூ.245 கோடி கட்டுமானப் பணிக்கும், ரூ.50 கோடி புத்தகங்கள் வாங்குவதற்கும், ரூ.5 கோடி இ-புத்தகங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இம்மைய வளாகம் ஏ மற்றும் பி என இரு பிளாக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், 350 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம், அறிவியல் உபகரணங்களுடன் கூடிய அறிவியல் மையம், விண்வெளியை கண்டுகளிக்கும் வகையில் கோளரங்கம், ஃஸ்பேஸ் லிப்ட் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
முதல் தளத்தில் வரவேற்பறை, அறிவியல் மையம், மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகமும், 2-வது தளத்தில் சொந்தமாக புத்தகம் எடுத்து வருபவர்கள் படிக்க குறிப்பிட்ட இடமும், சிறுவர்களுக்கான நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.
3-ம் தளத்தில் போட்டித்தேர்வு பயிற்சி மையம், நிர்வாகப் பிரிவு, நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. 4-ம் தளத்தில் வரலாற்று புத்தகங்கள் பிரிவு, தமிழ் நூல்கள் பிரிவு, பருவ இதழ்கள், 5-வது தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவு, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான இன்குபேஷன் சென்டர், 6-வது தளத்தில் ஆங்கிலம் கற்கும் பிரிவு, இன்குபேஷன் சென்டர், 7-வது தளத்தில் அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
பெரியார் அறிவுலகத்தின் திறப்பு விழா வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது. முதல்வர் விஜய் கலந்து கொண்டு இம்மையத்தை திறந்து வைக்கிறார். அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தினர் கூறும்போது, ‘‘வரும் 16-ம் தேதி கோவை வரும் முதல்வர் விஜய், நஞ்சப்பா சாலையில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் எனப்படும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தை திறந்து வைக்கிறார். மற்ற நிகழ்வுகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை’’என்றனர்.
இது தொடர்பாக கோவை காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘முதல்வர் வருகையையொட்டி, அதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றனர்.