“பிரச்சாரத்துக்காக காங்கிரஸ் அழைத்தும் முதல்வர் விஜய் வரவில்லை” - நாராயணசாமி

Puducherry Former cm Narayanasamy

நாராயணசாமி

Updated on: 
2 min read

புதுச்சேரி: “காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்துக்கு முதல்வர் விஜய்யை அழைத்தும் அவர் வரவில்லை. புரோக்கர்களை வைத்து ஊழல் ஆட்சி நடத்தும் முதல்வர் ரங்கசாமிக்கு, காமராஜர் பெயரை சொல்ல தகுதி இல்லை” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் புதுச்சேரி சார்பில் முதல்வரும், நிதித் துறை அமைச்சருமான ரங்கசாமி பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

அதிகாரிகளுக்கு அந்தக் கூட்டத்தில் மாநிலத்தின் கோரிக்கைகளை அரசியல் ரீதியாக எடுத்துரைப்பதற்கான வாய்ப்பு இல்லை. புதுச்சேரியில் வணிகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தொடர்பாகப் பல்வேறு கோரிக்கைகள் உள்ளன. அவற்றை இந்தக் கூட்டத்தில் எடுத்துரைத்திருக்கலாம்.

ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட பிறகு புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி குறைந்துள்ளது. புதுச்சேரி மக்களின் சார்பில் பேச வேண்டிய வாய்ப்பை முதல்வர் தவறவிட்டுவிட்டார். மக்கள் நலனுக்கான ஜிஎஸ்டி கூட்டத்தை புறக்கணிக்கும் முதல்வர் ரங்கசாமிக்கு காபி குடிப்பதற்காக ஆரோவில் செல்வதற்கு மட்டும் எப்படி நேரம் கிடைக்கிறது?

விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்து விலைவாசியைக் குறைக்கும் நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளவில்லை. நிதி ஆதாரம் இல்லாத நிலையில் முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.

எந்தக் கோப்பை அனுப்பினாலும் நிதித்துறையின் ஒப்புதல் கிடைப்பதில்லை என்று முதல்வரே வெளிப்படையாகத் தெரிவிக்கும் நிலையில், திட்டங்களை அறிவிப்பதோடு நிறுத்திக்கொள்கிறார். அவற்றைச் செயல்படுத்துவதில்லை. அதிகாரிகளை விமர்சித்துவிட்டு முதல்வர் தப்பித்துக்கொள்கிறார்.

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் ஜனநாயகத்தைவிடப் பணநாயகமே வெற்றி பெற்றுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி பல கோடி ரூபாய் செலவழித்து வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற இரண்டு இடைத்தேர்தல்களில் தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பணம் கொடுக்காமல் தேர்தலைச் சந்தித்துள்ளது.

புதுச்சேரியில் பணம் கொடுத்ததால் ஊழல்வாதி வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலை தொடர்ந்தால், மக்களுக்குச் சேவை செய்ய விரும்பும் சாதாரணத் தொண்டர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாத சூழல் உருவாகும், என்றார்.

அப்போது, காங்கிரஸ் கட்சியும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நாராயணசாமி, ‘யார் பணம் கொடுத்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடிக்கணக்கில் செலவு செய்து எம்எல்ஏவாக வருபவர்கள் எவ்வாறு மக்கள் நலனில் கவனம் செலுத்துவார்கள்’ என தெரிவித்தார்.

மேலும் அவர், ‘புதுச்சேரியில் மாசுக்கட்டுப்பாட்டுத் துறையும் சுற்றுச்சூழல் துறையும் முறையாகச் செயல்படவில்லை. முக்கிய ஆறுகளில் கழிவுநீர் கலப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. குடிநீரில் அதிக அளவு உப்புத்தன்மையும் ரசாயனங்களும் இருப்பது அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது. புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் குடிநீரின் டிடிஎஸ் அளவு 2,000-ஐ தாண்டியுள்ளது.

புதுச்சேரியில் ஆட்சி அமைந்து பல நாட்களாகியும் சட்டப்பேரவை தற்காலிக தலைவரே சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்துவதுடன், பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிலை தொடர்கிறது. அவரை வைத்தே ஆட்சியை நடத்திவிடலாம் என்று அரசு நினைக்கிறதா?

கொலை, கொள்ளை, நில அபகரிப்பு உள்ளிட்ட குற்றங்களால் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது. ஸ்பா மற்றும் மசாஜ் மையங்களில் பாலியல் தொழில் நடைபெறுகிறது. இதனால் புதுச்சேரியின் கலாச்சாரம் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

மேலும், “முதல்வர் ரங்கசாமியைச் சுற்றி ஆறு இடைத்தரகர்கள் இருக்கின்றனர். ஊழல் ஆட்சி நடத்தும் ரங்கசாமி காமராஜரின் பெயரை உச்சரிப்பதற்குக்கூட தகுதியில்லை. என்.ஆர். காங்கிரஸுக்கும், தவெகவுக்கும் இடையே என்ன தொடர்பு உள்ளது என்பது தனக்குத் தெரியாது. காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்துக்கு விஜய்யை அழைத்தும் அவர் வரவில்லை” என்றார்.

இரு கட்சிகளுக்கும் இடையே மறைமுகக் கூட்டணி உள்ளதா? என்ற கேள்விக்கு, ‘அதனை முதல்வர் ரங்கசாமியிடம் தான் கேட்க வேண்டும்’ என நாராயணசாமி தெரிவித்தார்.

Puducherry Former cm Narayanasamy
சுடுகாட்டில் போராட்டம் நடத்த சித்தர்காடு கிராம மக்களுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in