அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்

300 பேருந்துகள் சேவை தொடங்கி வைப்பு
அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்
Updated on
2 min read

சென்னை: தமிழக முதல்வர் விஜய் இன்று சென்னை மாநகரப் பேருந்தில் தலைமைச் செயலகம் முதல் கலங்கரை விளக்கம் வரை பயணித்தார்.

முன்னதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 300 அரசுப் பேருந்துகளின் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்.

சென்னை, கோவை உள்ளிட்ட 6 கோட்டங்களுக்காக 164 டீசல் பேருந்துகள், 136 சிஎன்ஜி பேருந்துகள் உள்பட 300 புதிய பேருந்துகள் தமிழக அரசால் வாங்கப்பட்டிருந்தன.

இந்தப் பேருந்துகளின் தொடக்க விழா இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. பேருந்துகளின் சேவையை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, திருவல்லிக்கேணி - பெரம்பூர் வழித்தடத்தில் செல்லும் 29 ஏ புதிய மாநகரப் பேருந்தில் முதல்வர் விஜய் பயணித்தார்.

தலைமைச் செயலகத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை அந்தப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய், ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு வாழ்த்து தெரிவித்தார். பேருந்துக்குள் அவர் புகைப்படம், வீடியோ எடுத்துக் கொண்டார். அந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

முதல்வருடன் போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் மற்றும் உயர் அதிகாரிகள் இருந்தனர்.

முதல்வரால் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்ட புதிய பேருந்துகள் கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பேருந்து முனையங்களிலிருந்தும், மாநகர் போக்குவரத்து பேருந்துகள் தொடர்புடைய பேருந்து நிலையங்களிலிருந்தும் போக்குவரத்து சேவையை உடனடியாக தொடங்கின.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசு, 8 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக, கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், வணிகம், சமூக மற்றும் பிற தேவைகளுக்காக மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகிறது. இப்போக்குவரத்துக் கழகங்களின் 26 மண்டலங்கள் மற்றும் 317 பணிமனைகளின் வாயிலாக இயக்கப்படும் சுமார் 21,527 பேருந்துகளின் மூலம் தினசரி சுமார் 2.05 கோடி பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இதில் சுமார் 64 சதவீதம் பேர் மகளிர், மாணவர்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், விடுதலைப் போராட்ட வீரர்கள், கலைமாமணி விருதாளர்கள், பிற தகுதிவாய்ந்த பயனாளிகள் கட்டணமில்லா பயணச் சலுகையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்துதல், முன்பு நிறுத்தப்பட்ட பகுதிகளில் மீண்டும் பேருந்து சேவைகளை இயக்குதல், பழைய பேருந்துகளை மாற்றுதல், பணிமனைகள் மற்றும் பயணிகள் வசதிகளை மேம்படுத்துதல், வாகனங்களின் தகுதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துதல், தொழில்நுட்ப அடிப்படையிலான பயணிகளின் சேவைகளை விரிவுபடுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

முதல்வர் தலைமையில் 17.06.2026 அன்று நடைபெற்ற போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தின்போது, போக்குவரத்துத் துறையை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாசற்ற, நவீன, தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய, பாதுகாப்பான மற்றும் பயணிகள் பயன்பெறும் வகையிலான பொதுப் போக்குவரத்து அமைப்பாக மேம்படுத்த வேண்டும் என்றும், ஸ்மார்ட் கார்டு அடிப்படையிலான முறையின் மூலம் டிஜிட்டல் கட்டண வசூல், GPS / Vehicle Location Tracking, பயணிகள் தகவல் அமைப்புகள், பேருந்து நிலையங்களில் 24x7 பயணிகள் உதவி மையங்கள் போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அதன்படி, பொதுப் போக்குவரத்து சேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 65 பேருந்துகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்திற்கு 36 பேருந்துகள், சேலம் கோட்டத்திற்கு 39 பேருந்துகள், கோயம்புத்தூர் கோட்டத்திற்கு 25 பேருந்துகள், கும்பகோணம் கோட்டத்திற்கு 49 பேருந்துகள், மதுரை கோட்டத்திற்கு 42 பேருந்துகள் மற்றும் திருநெல்வேலி கோட்டத்திற்கு 44 பேருந்துகள் என மொத்தம் 300 புதிய பேருந்துகளின் சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இப்பேருந்துகளில் 164 டீசல் பேருந்துகளும், BS VI இணக்கமான, குறைந்த மாசு உமிழ்வு கொண்ட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற 136 CNG பேருந்துகளும் அடங்கும். இப்புதிய பேருந்துகள் நகர மற்றும் புறநகர் பேருந்து சேவைகளை வலுப்படுத்தி, பயணிகளுக்கான தொடர் சேவையை மேம்படுத்தி, பயணிகள் காத்திருப்பு நேரத்தைக் குறைத்து, பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்திற்கு வகைசெய்யும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்
வெனிசுலாவில் அடுத்தடுத்து பூகம்பம்: நிலைகுலைந்த நகரங்கள் - அவசரநிலை அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in