கரூருக்கு முதல்வர் விஜய் நாளை வருகை: நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்குகிறார்

கரூருக்கு முதல்வர் விஜய் நாளை வருகை: நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்குகிறார்
Updated on
1 min read

கரூர்: மக்​கள் சந்​திப்பு மற்​றும் நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா​வில் பங்​கேற்க, முதல்​வர் விஜய் நாளை (ஜூலை 10) கரூர் வரு​கிறார். இதற்​காக வெண்​ணெய்​மலை​யில் தனி​யார் அரங்க வளாகத்​தி​லும், ஆட்​சி​யர் அலு​வல​கத்​தி​லும் ஏற்​பாடு​கள் தீவிர​மாக நடை​பெற்று வரு​கின்​றன.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்​தாண்டு செப்​.27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்​டது. அதில் 41 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பான வழக்கை சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. இந்​தச் சம்​பவத்​தைத் தொடர்ந்​து,

தவெக சார்​பில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்குத் தலா ரூ.20 லட்​சம் நிவாரணம் வழங்​கப்​பட்​டது. பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினரை தவெக தலை​வர் விஜய் சென்​னைக்கு வரவழைத்து ஆறு​தல் கூறி​னார். பின்​னர் நடந்து முடிந்த தேர்​தலில் தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டு, விஜய் முதல்​வ​ராக பதவி ஏற்​றார். இந்​நிலை​யில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு அரசு வேலை உள்​ளிட்ட உதவி​களை வழங்க முதல்​வர் விஜய் கரூர் வரு​வார் என்று தெரிவிக்​கப்​பட்​டது.

இதற்​கிடை​யில், உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு அரசு வேலைக்​கான உத்​தரவு வழங்​கு​வது விசா​ரணை​யைப் பாதிக்​கும் என்று உச்ச நீதி​மன்​றத்​தில் திமுக தொடர்ந்த வழக்கை நீதிப​தி​கள் தள்​ளு​படி செய்​தனர். இதனால் முதல்​வர் கரூர் வரு​வதற்​கான தடை நீங்​கியது.

நாளை கரூர் வரும் முதல்​வர் விஜய், வெண்​ணெய்மலை​யில் உள்ள அட்​லஸ் கலை​யரங்​கில் மக்​கள் சந்​திப்பு நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​கிறார். இதில், 5,000 பேர் வரை பங்​கேற்க அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. அவர்​களுக்கு க்யூஆர் கோடுடன் அடை​யாள அட்டை வழங்​கப்​படு​கிறது.

இதைத் தொடர்ந்​து, கரூர் ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் நடை​பெறும் நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா​வில், முதல்​வர் கலந்து கொண்டு பொது​மக்​களுக்குப் பல்​வேறு துறை சார்ந்த நலத்​திட்ட உதவி​களை வழங்​கு​கிறார். இதில், கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்குப் பல்​வேறு நலத்​திட்ட உதவி​கள் வழங்க உள்​ள​தாக கூறப்​படு​கிறது.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக வெண்​ணெய்​மலை​யில் உள்ள அட்​லஸ் கலை​யரங்​கில் தற்​காலிக அரங்​கம் அமைக்​கும் பணி​கள் தீவிர​மாக நடை​பெற்று வரு​கின்​றன. இந்த அரங்​கத்தை சுற்​றி​யும், கரூர் - நாமக்​கல் நெடுஞ்​சாலை​யில் இருந்து அரங்​கத்​துக்கு முதல்​வர் விஜய் வரும் வழி​யிலும் சாலை​யோரங்​களில் தகர ஷீட்​கள் கொண்டு தடுப்​பு​கள் அமைக்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதே​போல, நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா நடை​பெறும் ஆட்​சி​யர் அலு​வல​கத்​தி​லும் ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

திமுக பதாகை

முதல்​வர் விஜய் வரு​கையை முன்​னிட்டு மாவட்ட நிர்​வாகம் சார்​பில் பேருந்து நிலை​யம், நிழற்​குடைகள் ஆகிய​வற்​றில் இருந்த திமுக பதாகைகள் அகற்​றப்​பட்டு வரு​கின்​றன. இதைக் கண்​டித்து மாநக​ராட்சி மண்டல குழுத் தலை​வர் எஸ்​.பி.க​னக​ராஜ் தலை​மை​யில் தி​முக கவுன்​சிலர்​கள், மாநக​ராட்​சி ஆணை​யர்​ பிரித்​வி​ராஜிடம்​ புகார்​ மனு அளித்​தனர்​.

கரூருக்கு முதல்வர் விஜய் நாளை வருகை: நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்குகிறார்
தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேர குற்றச்சாட்டு: செந்தில் பாலாஜி, தம்பி அசோக் குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in