

காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்
சென்னை: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில் கட்சியின் தொண்டர்களுக்கு இது வரலாற்று சிறப்புமிக்க நாள் என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டிலுள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இது மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நாளாகும்.
கடந்த 59 ஆண்டுகளாக நமது தொண்டர்கள் கட்சியின் சித்தாந்தத்தை ஏந்தி, இரவு பகலாகப் போராடி வந்துள்ளனர். ஆட்சியில் பங்கேற்பதற்கான எந்தவொரு நம்பிக்கைக் கீற்றும் தென்படாத சூழ்நிலையிலும் கூட, தமிழ்நாடு மக்களுக்கு இன்னும் சிறந்த முறையில் சேவை செய்வதற்காக, அரசில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நமது தொண்டர்கள் எப்போதும் விரும்பினர்.
அந்த வகையில், 59 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு காங்கிரஸ் அமைச்சர்கள் இன்று புதிய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு அமைச்சர் பதவிகளையும் நமது சித்தாந்தத்துக்காக எவ்வித சுயநலமுமின்றி உழைத்த, அர்ப்பணிப்புமிக்க, விசுவாசமான மற்றும் கடின உழைப்பாளிகளான நமது தொண்டர்களுக்கே நாங்கள் சமர்ப்பிக்கிறோம்.
அதேபோல், கடந்த 59 ஆண்டுகளாக அதிகாரத்தில் எந்தப் பங்கும் இல்லாத நிலையிலும், தொண்டர்களின் பக்கபலமாக நின்ற நமது கட்சித் தலைமைக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள இருவரும் கட்சித் தொண்டர்களின் நலனுக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி கூறியதாவது: கடந்த ஆறு தசாப்தங்களாக ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட, காங்கிரஸ் கட்சி தொடர்ந்து நிலைத்து நின்று, பல்வேறு கூட்டணிகளின் வாயிலாகத் தனது வாக்கு வங்கியைக் தக்கவைத்து, தேர்தல்களில் ஒரு முக்கியப் பங்காற்றி வந்துள்ளது. அந்தப் பெருமை அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் நிறுவனக் கட்டமைப்புக்கும், அதன் தலைமைக்குமே சேரும். இன்று, நிச்சயமாக நமக்கு அரசில் பங்கேற்பதற்கான ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளது.
மேலும், இது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திசைமாற்றத்தைக் குறிக்கிறது. ஏனெனில், 1952-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் முதன்முறையாக ஒரு கூட்டணி ஆட்சி மலரவிருக்கிறது.
எனவே, இது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவருக்கும் நிச்சயமாக ஒரு மகிழ்ச்சியான தருணமாகும். இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேபோல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல தலைவர்களும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.