

சென்னை: தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்ற பிறகு, முதல்வர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக அக்கட்சித் தலைவர் விஜய் கடந்த மே 10-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் முதல்வர் விஜய் உட்பட மொத்தம் 35 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அனைவருக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் வளர்ச்சிப் பணிகள், நலத் திட்டங்களை கண்காணித்து விரைந்து செயல்படுத்தும் வகையில், மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் 3-ம் தேதி நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக அரசு பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பதால் மக்கள் மத்தியில் இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும். சில தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதவிர, பட்ஜெட் தாக்கல் செய்வது, அதில் இடம்பெற வேண்டிய சிறப்பு அம்சங்கள், ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய கருத்துகள் உள்ளிட்டவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
அதேபோல, மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்க வேண்டிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகள், டாஸ்மாக் கடைகள் மூடல், கூடுதல் தொகை வசூலிப்பது, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யுமாறு விவசாயிகள் வலியுறுத்தி வருவது ஆகியவை தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு, பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.