

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையொட்டி முதல்வர் விஜய் அக்டோபர் முதல் வாரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்.6-ம் தேதி நடைபெறுகிறது. இதில், தவெக சார்பில் இந்த 2 தொகுதிகளி்ன் முன்னாள் எம்எல்ஏக்களான அதிமுகவில் இருந்து வந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திமுக சார்பில் ஐ.பரந்தாமன், எஸ். சுகன்யா, அதிமுக சார்பில் கனிதா சம்பத், பானுமதி ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இவர்களுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள், நாம் தமிழர் கட்சி சார்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் 5 முனை போட்டி உருவாகியுள்ளது.
இந்நிலையில் முதல்வர் விஜய், மதுராந்தகத்தில் அக்.3-ம் தேதியும், தாராபுரத்தில் 4-ம் தேதியும் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இப்பிரச்சாரத்தில் தவெக அரசின் சாதனைகளையும், திட்டங்களையும் மக்களிடையே முதல்வர் எடுத்துரைக்க உள்ளதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் இரண்டு தொகுதிகளிலும் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பழனிசாமி பிரச்சாரம்
இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி செப்.24, 25 மற்றும் அக்.3 ஆகிய நாட்களில் மதுராந்தகம் தொகுதியிலும், செப்.27, 28 மற்றும் அக்.2 ஆகிய நாட்களில் தாராபுரம் தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இதேபோல், திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களும் தங்களது பிரச்சாரத்தை விரைவில் தொடங்க உள்ளனர்.
எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை பாமக தலைவர் அன்புமணி அறிவிப்பு
பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்.6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி பாமக மாநில நிர்வாகிகள், மற்றும் இரு தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் நடத்திய கலந்தாய்வுகளின் முடிவில், எந்தக் கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.