முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம்: திருவாரூரில் உள்ளூர் விடுமுறை

முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம்: திருவாரூரில் உள்ளூர் விடுமுறை
Updated on: 
1 min read

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற ஜாம்புவானோடை தர்காவில், மகான் செய்கு தாவூது ஒலியுல்லா ஆண்டவரின் 725-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று இரவு சந்தனக்கூடு ஊர்வலம் தொடங்கி இன்று அதிகாலை 2 மணி வரை நடைபெற்றது.

கடந்த 12-ம் தேதி தர்காவின் முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாகிப் தலைமையில் கொடியேற்றத்துடன் கந்தூரி விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, பத்தாம் நாள் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி, தர்காவிலிருந்து புனித சந்தனக் குடம் தலையில் சுமந்து எடுத்து வரப்பட்டது. பின்னர், கண்ணாடிகள் மற்றும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டில் புனித சந்தனம் வைக்கப்பட்டது. தொடர்ந்து, வாணவேடிக்கைகள் முழங்க, மேளதாளங்கள் இசைக்க சந்தனக்கூடு ஊர்வலம் உற்சாகமாகத் தொடங்கியது.

தர்காவிலிருந்து புறப்பட்ட அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, முத்துப்பேட்டையின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று மீண்டும் தர்ஹாவை வந்தடைந்தது. இதையடுத்து, அதிகாலையில் புனித ரவுலா ஷரீபில் சந்தனம் பூசும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் இந்த விழாவை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, உள்ளூர் மக்களுக்காக இன்று மாலை அந்திக்கூடு ஊர்வலம் நடைபெற உள்ளது. வரும் 25-ம் தேதி கொடியிறக்கத்துடன் 725-ம் ஆண்டு கந்தூரி விழா நிறைவடைகிறது. மதங்களைக் கடந்து மனிதநேயத்தையும் நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம்: திருவாரூரில் உள்ளூர் விடுமுறை
ராஜராஜ சோழனின் சதய விழாவை சிறப்புற நடத்த அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in