

சென்னை: தமிழகத்தில் நீர் ஆதாரங்கள் மேம்பாடு, தடையற்ற குடிநீர் விநியோகம் உள்பட அத்தியாவசிய பணிகளை செய்வதற்காக ரூ.340 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் விஜய் உத்தரவிட் டுள்ளார்.
தென்மேற்குப் பருவமழை பொழிவு, மாவட்டங்களில் குடிநீர் விநியோகம், வேளாண் பயிர்சாகுபடி நிலை குறித்து ஆலோசனைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டம் தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழைக் காலத்தில் இதுவரை மழை இயல்பைவிடக் குறைவாகப் பெய்துள்ளது.
இதையடுத்து மாநிலத்தின் குடிநீர் ஆதாரத்தைப் பலப்படுத்துவதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட் டுள்ளன. அதன்படி ஆழ்துளை கிணறுகளை தூர்வாருதல், பழுதான மின்வடங்கள், குழாய்களை மாற்றியமைத்தல், தேவையான இடங்களில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு மக்களுக்கு குடிநீரை தடையின்றி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 85,350 ஏக்கர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.134 கோடியில் இதுவரை ரூ.16.93 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறுவைத் தொகுப்புத் திட்டத்தை ஆகஸ்ட் 15-க்குள் வழங்க திட்டமிடப்பட் டுள்ளது. இந்த பணிகளை வேளாண்மைத் துறை விரைந்து முடிக்கவும், கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களை வட்டார அளவில் சேமித்து வைக்கவும் முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.
இதுதவிர மாநிலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகள் வாயிலாக நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகளை துரிதமாகச் செயல்படுத்தவும், லாரிகள் மூலமாகக் குடிநீர் விநியோகம் செய்யவும் ரூ.330 கோடியும், கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைக்கு ரூ.10 கோடியும் என மொத்தம் ரூ.340 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், உரிய மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.