

சென்னை: தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிகளிலும் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் தலைமைச் செயலர் மு.சாய்குமார், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, நிதித்துறை செயலர் எம்.ஏ.சித்திக் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் உட்பட மத்திய அரசின் திட்டங்கள், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் உதவியுடன் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன்பின் முதல்வர் விஜய், துறை அலுவலர்களுக்கு வழங்கிய அறிவுறுத்தல் வருமாறு: தமிழகத்தில் 25 மாநகராட்சிகளிலும் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், 146 நகராட்சிகள் மற்றும் 479 பேரூராட்சிகளிலும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள், தினமும் குறைந்தபட்சம் 3 மணி நேரமாவது குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மாநகராட்சிகளிலும் 100 சதவீதம் குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை
இணைப்புகள் வழங்க வேண்டும். சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நீர்நிலைகளில் கலப்பதை தடுத்து, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பூங்கா பராமரிப்பு, தொழில் உள்ளிட்ட பிற பயன்பாடுகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
வெள்ளத்தடுப்பு நடவடிக்கை
சென்னை அடையாறு மறுசீரமைப்பு திட்டத்துடன் இணைத்து, கூவம் ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாயை சீரமைக்கும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். கழிவுநீர் கலப்பதைத் தடுத்து, கரைகளை வலுப்படுத்தி, வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுடன் ‘நீல-பசுமை வளாகங்களை’ உருவாக்க உடனே ஆய்வு செய்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
அனைத்து திட்டங்களும் குறித்த காலக்கெடுவுக்குள் நிறைவேற்றப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விரைவாகக் கொண்டுவரப்பட வேண்டும் என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த நகர்ப்புற மாற்றத் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் சுமார் ரூ.30,000 கோடியிலான கட்டமைப்பு வசதிகள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல், 2031-ம் ஆண்டுக்குள் நகர்ப்புறங்களில் பசுமை உள்கட்டமைப்பு விரிவுபடுத்தப்படும்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் நவீன பூங்காக்களும், வெள்ளத்தடுப் புக்காக ஸ்பாஞ்ச் பூங்காக்களும் அமைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் நகரங்களில் 5 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமைப் பரப்பளவு அதிகரிக்கப்படும்.
மேலும், வெறிநாய் கடியால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில், அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 2031-ம் ஆண்டுக்குள் விலங்கு கருத்தடை மையங்கள் அமைக்கப்படும்.
அதேபோல், முதல்வரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மாற்றத் திட்டமானது (2026–2031) குடிநீர், பாதாளச் சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை, சாலை வசதிகள், டிஜிட்டல் நிர்வாகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு கட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். இதற்கு 5 ஆண்டுகளில் சுமார் ரூ.1.50 லட்சம் கோடி முதலீடு தேவைப்படும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் நிதி, நகராட்சிப் பத்திரங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.