

சென்னை: தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழைகளை எதிர்கொள்ள அனைத்து துறைகளும், மாவட்ட நிர்வாகங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். பேரிடர் காலங்களில் உயிர் சேதத்தை தவிர்ப்பது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.
தென்மேற்குப் பருவமழை அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் கடந்த மே 16-ம் தேதி தொடங்கிய நிலையில், கேரளா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் கடந்த 4-ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. பருவமழை மேலும் தீவிரமடைவதற்கு ஏற்ற சூழல் நிலவுகிறது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் மழைப்பொழிவு வழக்கத்தைவிட குறைவாகப் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தென்மேற்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் சம்மந்தப்பட்ட துறைச் செயலர்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள் எடுத்துரைத்தனர்.
இதைத் தொடர்ந்து, அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை வழங்கி முதல்வர் விஜய் பேசியதாவது: எந்த ஒரு பேரிடர் சூழலையும் எதிர்கொள்ள அனைத்து துறைகளும், மாவட்ட நிர்வாகங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். பேரிடர் காலங்களில் உயிர் சேதத்தை தவிர்ப்பது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் 24 மணிநேரமும் செயல்பட வேண்டும். மீட்புக் கருவிகள், முதல்நிலை மீட்பாளர்கள், மீட்புப் படையினர் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களில் மீட்புப் படையினர் முன்னரே நிலைநிறுத்தப்பட வேண்டும்.
மக்களை தங்கவைக்கும் வகையில் நிவாரண மையங்களை தயாராக, தூய்மையாக வைக்க வேண்டும். அங்கு மின்சாரம், உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்றஅடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். மழைநீர் தேக்கம், சாலைகளில் மரம் விழுதல் போன்ற மழைக்கால பாதிப்புகளை பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். அறுந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பிகள், பலவீனமான மின்கம்பங்கள், மின்கோபுரங்களை மின்துறையினர் உடனே சீரமைக்க வேண்டும். மழைக்கால நோய்த் தொற்றுகளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறையினர் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல, வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், நீர்நிலைகளைத் தூர்வாருதல், நீர்நிலை ஆக்கிரமிப்புகள், ஆகாயத் தாமரைகளை அகற்றுதல் போன்ற பணிகளை இப்போதே மேற்கொள்ள வேண்டும். வடகிழக்குப் பருவமழை தொடங்க இன்னும் 4 மாதங்கள் இருப்பதால், முன்னேற்பாட்டுப் பணிகளை அதற்குள் முடித்து, எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலர் சாய்குமார், வருவாய் நிர்வாக ஆணையர் நா.முருகானந்தம், பேரிடர் மேலாண்மை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், மின்வாரியத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன், துறைச் செயலர்கள் க.மணிவாசன் (உள்துறை), எம்.ஏ.சித்திக் (நிதி), சத்யபிரத சாஹு (நீர்வளம்), கே.எஸ்.பழனிசாமி (வருவாய்), டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், தீயணைப்புத் துறை இயக்குநர் சீமா அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.