

சென்னை: அரசுப் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார். இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக தலைவர் விஜய், கடந்த மே 10-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். அதன்பின் அரசுப் பயணமாக கடந்த மே 27-ம் தேதி முதல் முறையாக முதல்வர் விஜய் டெல்லி சென்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்த முதல்வர் விஜய், தமிழகத்துக்குத் வேண்டிய நிலுவை நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள் விடுத்தார். பின்னர் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு மறுநாளே சென்னை திரும்பினார்.
இந்நிலையில் 2-வது முறை 3 நாள் அரசுப் பயணமாக முதல்வர் விஜய் நேற்று டெல்லி சென்றார். சென்னையில் இருந்து தனி விமானத்தில் நேற்று காலை 10 மணிக்குப் புறப்பட்டு டெல்லி சென்றடைந்த முதல்வர் விஜய், முதலில் அங்குள்ள தமிழக அரசின் இல்லத்துக்குச் சென்றார். அங்கு அவரை தமிழக அரசு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து அவருக்கு காவல் துறையின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
அதன்பின்னர் முதல்வர் விஜய் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். மாலை 4 மணிக்குத் தமிழக அரசு இல்லத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அவர் காரில் புறப்பட்டு சென்றார். அங்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, முதல்வர் விஜய் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனையும் அவரது இல்லத்தில் விஜய் சந்தித்தார்.
இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை, அவர்களது இல்லத்தில் முதல்வர் விஜய் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தந்ததற்கு விஜய் நன்றி தெரிவித்ததாகவும், தமிழகத்தில் தவெக கூட்டணியைப் பலப்படுத்த காங்கிரஸ் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகதகவல்கள் கிடைத்துள்ளன.
அதன்பின்னர், இந்தியக் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார். தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி அமைத்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
நிதி ஆயோக் கூட்டம்: பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்வர்களுடனான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த ஆண்டுக்கான கூட்டம் ‘வளர்ந்த இந்தியா @2047’க்கான அனைவரையும் உள்ளடக்கிய மனித மேம்பாடு' என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறுகிறது. நாட்டின் வளர்ச்சி முன்னுரிமை மற்றும் அவற்றைச் செயல்படுத்துவதற்கான உத்திகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்கிறார். கூட்டம் முடிந்த பின்னர் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை வெள்ளிக்கிழமை காலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு தனிப்பட்ட பயணமாக கர்நாடக மாநிலம் மங்களூரு செல்கிறார். அங்குள்ள மூகாம்பிக்கை கோயிலுக்கு சென்றுவிட்டு பின்பு மங்களூருவில் இருந்து, தனி விமானத்தில் புறப்பட்டு வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு முதல்வர் விஜய் சென்னை திரும்புகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.