

நிதி ஆயோக் கூட்டத்துக்குப் பிறகு, குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் விஜய்.
புதுடெல்லி: வளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக முன்னேறிச் செல்கிறது என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். இக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் விஜய், ‘‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து, அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசுக்கு அனுமதி தரவேண்டும். கோவையில் 2-வது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திட்ட கமிஷனுக்கு பதிலாக ஏற்படுத்தப்பட்ட ‘நிதி ஆயோக்’ அமைப்பின் 11-வது நிர்வாகக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், விஜய் (தமிழகம்), சிவகுமார் (கர்நாடகா), சதீசன் (கேரளா), சுவேந்து அதிகாரி (மேற்கு வங்கம்), சந்திரபாபு நாயுடு (ஆந்திரா), யோகி ஆதித்யநாத் (உத்தரப் பிரதேசம்), புஷ்கர் சிங் தாமி (உத்தராகண்ட்), தேவேந்திர பட்னாவிஸ் (மகாராஷ்டிரா), ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட்) உட்பட 28 மாநில முதல்வர்களும் பங்கேற்றனர். யூனியன் பிரதேசங்கள் சார்பில் துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை.
ராஜ்நாத் சிங், அமித் ஷா, சிவராஜ் சிங்சவுகான், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, குமாரசாமி, தர்மேந்திரபிரதான் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், நிதி ஆயோக் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நிதி ஆயோக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்றது இதுவே முதல் முறை.
வளர்ச்சி அடைந்த இந்தியா: ‘வளர்ந்த இந்தியா@2047-க்கான அனைவரையும் உள்ளடக்கிய மனித மேம்பாடு’ என்ற கருப்பொருளில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: இக்கட்டான சூழலிலும் வளர்ச்சிப் பாதையில் இந்தியா தன்னம்பிக்கையுடன் வேகமாக முன்னேறிச் செல்கிறது. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். நாட்டின் வளர்ச்சிக்கு மாநிலங்கள் இடையே ஒத்துழைப்பு நீடிக்க வேண்டும்.
இளைஞர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். வேலைவாய்ப்புக்கு ஏற்ப அவர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்திய நிறுவனங்கள் சர்வதேச தரத்துக்கு இணையாக பொருட்களை தயாரிக்க வேண்டும். அப்போதுதான் சர்வதேச சந்தையில் போட்டியிட முடியும். இந்தியாவின் வளர்ச்சியில் பெண்கள் முக்கிய பங்களித்து வருகின்றனர். அவர்களது கல்வி, திறன் மேம்பாடு, பாதுகாப்புக்கு மாநில அரசுகள் முன்னுரிமை தரவேண்டும்.இவ்வாறு பிரதமர் பேசினார்.
பல்வேறு மாநில முதல்வர்களும் இந்த கூட்டத்தில் பேசினர். தமிழக முதல்வர் விஜய் பேசியதாவது: அதிகாரம் அளிக்கப்பட்ட மாநிலங்கள், கூட்டுறவு கூட்டாட்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் மூலமாகமட்டுமே வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க முடியும். 2036-ம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக தமிழகத்தை உயர்த்தும் இலக்குடன் பணியாற்றி வருகிறோம். தமிழகத்தில் இளைஞர் திறன், வேலை வாய்ப்பு இயக்கம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் ஆண்டுதோறும் 5 லட்சம் இளைஞர்களுக்கு உதவித் தொகையுடன் பயிற்சிகள் வழங்கப்படும்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து, அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசுக்கு அனுமதி தர வேண்டும். கோவையில் 2-வது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். அதற்கான நிலத்தை மாநில அரசு வழங்கும். இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு உதாரணமாக விளங்கும் திருக்குறளை இந்தியாவின் ‘தேசிய இலக்கியமாக’ அறிவிக்க வேண்டும்.
நிதி பொறுப்புணர்வு, சமூக முன்னேற்றம், மக்கள்தொகை நிலைநிறுத்தல் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். மாநில அரசின் ஊரக வீட்டுவசதித் திட்டங்களுக்கும், 100 நாள்வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். சிறப்பான நிர்வாகம், சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய கொள்கைகளுடன் மத்திய அரசுடன் இணைந்து தமிழகம் ஆக்கப்பூர்வமாகச் செயல்படும். இவ்வாறு அவர் பேசினார்.
முதல்வராக பதவியேற்ற பிறகு விஜய் பங்கேற்கும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இது ஆகும். இந்தக் கூட்டம் முடிந்த பிறகு, பிரதமர் மோடியை, முதல்வர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது தமிழகத்துக்கு தரவேண்டிய நிலுவை நிதியை விரைந்து வழங்க வேண்டும் என்று பிரதமரிடம், அவர் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது.
தேசிய கல்விக் கொள்கை அல்லது மும்மொழிக் கொள்கையை திணிக்காமல், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் நிலுவையில் உள்ள ரூ.3,284 கோடி நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும். ‘வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம்’, ‘அனைவருக்கும் வீடு’ திட்டங்களுக்கு போதிய நிதியுதவி அளிக்க வேண்டும். பேரிடர்களை எதிர்கொள்ள காலநிலைத் தாங்குதன்மை பெருந்திட்டம்-2045, ஒகேனக்கல் 3-ம் கட்ட குடிநீர் திட்டத்துக்கான ரூ.2,283 கோடி நிதியுதவிக்கு மத்திய அரசு ஒப்புதல் தரவேண்டும்.
இலங்கை, பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள், அவர்களது படகுகளை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குலசேகரபட்டினம் விண்வெளி மையத்தை ‘தேசிய விண்வெளி உற்பத்தி மையமாக’ அறிவிக்க வேண்டும். சென்னை - கன்னியாகுமரி அதிவேக ரயில் திட்டம், செங்கல்பட்டு - திருச்சி, திருச்சி – கரூர், கரூர் –கோவை, சென்னை மாதவரம் – சோழவரம் நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.