

சென்னை: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.) மத்திய அரசின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தை, 2 சதவீதம் அடிப்படை பங்குகள் மற்றும் 1 சதவீதம் கூடுதல் பங்குகள் ஒதுக்கீட்டு விருப்பம் உட்பட 3 சதவீதம் வரையிலான பங்குகளை 'விற்பனைக்கான சலுகை' மூலம் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு எடுத்துள்ள முடிவு குறித்து தமிழக அரசின் வருத்தத்தை தெரிவிக்க இக்கடிதம் எழுதுகிறேன்.
மேலும், என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் மத்திய அரசின் பங்குகளை மேலும் குறைக்கும் எந்தவொரு முடிவையும், தமிழக அரசு கொள்கை ரீதியாக ஆட்சேபிக்கிறது. இவ்விவகாரம் தமிழகத்துக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
என்.எல்.சி இந்தியா நிறுவனம், மாநில அரசு நிர்வாகத்தின் விரிவான வசதி வாய்ப்புகள், உள்கட்டமைப்பு மேம்பாடு, மறுவாழ்வு நடவடிக்கைகள் மட்டுமல்லாது, தமிழக மக்களின் ஒத்துழைப்புடன், மாநில அரசு வாயிலாகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் பல தசாப்தங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனத்தில் மாநில அரசுக்கு நியாயமான மற்றும் நீடித்த உரிமை உள்ளது.
மேலும், என்.எல்.சி இந்தியா நிறுவனம் என்பது எரிசக்தி பாதுகாப்பு, கனிமவள மேம்பாடு மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த தேசிய சொத்து என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மத்திய அரசின் பங்குகளை மேலும் குறைப்பது, அது எவ்வளவு குறைவாக இருப்பினும், இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் பொது உடைமைத் தன்மைக்கு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். இத்தகைய நடவடிக்கை நிதி சார்ந்த அம்சங்களைக் கடந்து, மாநிலத்தின், மாநில மக்களின் நீண்டகால நலன்கள், நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பாதிப்பதாக அமையும்.
மேலும், என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் மத்திய அரசின் பங்குகள் மேலும் குறைக்கப்படக் கூடாது என்பதில் தமிழக அரசு தொடர்ந்து உறுதியாக இருந்துவருகிறது. இத்தகைய பொதுத்துறை நிறுவனங்கள், தொடர்ந்து முழுமையாக அரசின் உரிமையிலும் கட்டுப்பாட்டிலும் மட்டுமே நீடிக்க
வேண்டும். இத்தகைய சூழலில், என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான தனது முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்.
மேலும், தமிழ்நாடு அரசின் எண்ணங்களையும், கொள்கை ரீதியான ஆட்சேபங்களையும் மத்திய அரசு உரிய முறையில் பரிசீலிக்கும் என்று உளப்பூர்வமாக நம்புகிறேன். இவ்வாறு கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசும்... இந்திய அரசும்...
தமிழக அரசின் நடைமுறைகளில் மத்திய அரசை குறிக்க ‘மத்திய அரசு’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. 2021-ல்
திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் ‘மத்திய அரசு’ என்பதற்கு பதில் ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையானது. இதற்கிடையே, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெகவின் புதிய அரசு நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களை செய்துவருகிறது. அதன் ஒருபகுதியாக தற்போது ‘ஒன்றிய அரசு’ என்ற சொல்லை விடுத்து ‘இந்திய அரசு’ என தற்போது பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் எழுதியுள்ள இந்தக் கடிதத்தில் இந்தச் சொற்பிரயோக மாற்றமும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.