

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் சொந்த கிராமமான தண்டராம்பட்டு வட்டம் சே.கூடலூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை: தமிழகத்தில் நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ளாமலே ஒப்பந்ததாரர்கள் ரூ.3.23 கோடி பெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வேலு மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் வீடு, அலுவலகம் உட்பட தமிழகம் முழுவதும் 20 இடங்களில் நேற்று தீவிர சோதனை நடத்தப்பட்டது.
தமிழக லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் கடந்த 2022 ஏப்.20-ம் தேதி ஒரு புகார் அளிக்கப்பட்டது. அதில், ‘கடந்த 2022 மார்ச் மாதத்தில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறையின் பல பிரிவுகளில், பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையிலேயே ஒப்பந்ததாரர்களுக்கு பல கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின் கூட்டுச் செயலால் இந்த மோசடி நடந்துள்ளது. இதுதவிர, மாநில நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ளவும், சீரமைக்கவும் ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ.5 ஆயிரம் கோடி நிதியிலும் ஊழல், முறைகேடு நடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, இந்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சமீபத்தில் விசாரணையைத் தொடங்கினர். இதில் பல முக்கிய தகவல்கள் தெரியவந்தன. கடந்த 2022-ல் மாநில நெடுஞ்சாலைகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வாராணசி - கன்னியாகுமரி சாலை, மண்மங்கலம், நன்னியூர் சாலை ஆகியவற்றின் தரத்தை மேம்படுத்தவும், நெரூர் - தளவாய்பாளையம் சாலை, கரூர் விரியம்பட்டி சாலை ஆகியவற்றை அகலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இந்த 4 சாலைகளுக்கும் அனுமதிக்கப்பட்ட தொகை ரூ.4.19 கோடி. இந்த சாலைகளில் கடந்த 2022 மார்ச் வரை எந்த பணியும் நடைபெறவில்லை. ஆனால், மேற்கண்ட சாலைகளுக்கான தொகையில் 77 சதவீதம், அதாவது ரூ.3.23 கோடி அளவுக்கு பணம் கடந்த 2022 மார்ச் 25 மற்றும் 28-ம் தேதிகளில் 2 தவணைகளாக ஒப்பந்த நிறுவனத்துக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 4 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதன்மூலம் ஒப்பந்ததாரர் நியாயமற்ற முறையில் ஆதாயமடைந்து இருப்பதும் தெரியவந்தது.
7 பிரிவுகளில் வழக்கு: இதுதொடர்பாக முதல்கட்ட ஆதாரங்கள் கிடைத்ததன் அடிப்படையில், தமிழக நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளாக இருந்த கண்ணன், பூபாலன் சிங், பெரியசாமி, சத்தியபாமா, நிதிலன், ரஃபீக் முகமது, தீபிகா, கார்த்திக், சத்யா மற்றும் சங்கர் ஆனந்த் இன்ஃப்ரா (ஒப்பந்ததாரர்) ஆகிய 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச் சதி, நம்பிக்கை மோசடி, போலி ஆவணம் தயாரிப்பு, கூட்டு சதி, ஊழல் தடுப்பு என 7 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீடு, திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் பகுதியில் அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது வீடு, அலுவலகம், அருணை மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கம்பன் மகளிர் கலைக் கல்லூரி, ஜீவா வேலு சிபிஎஸ்இ பள்ளி ஆகிய இடங்களில் சென்னை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் 30-க்கும் மேற்பட்டோர் 7 குழுக்களாகப் பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.
அதேபோல, எ.வ.வேலுவின் சொந்த கிராமமான தண்டராம்பட்டு அடுத்த சே.கூடலூரில் உள்ள அவரது வீடு, திருவண்ணாமலை சட்டநாயக்கன் தெருவில் உள்ள திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன் வீடு, கரூர் பழனியப்பா தெருவில் வசிக்கும் ஒப்பந்ததாரரும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பருமான எம்.சி.சங்கர் ஆனந்தின் வீடு, அலுவலகம் உட்பட 11 பேர் தொடர்புடைய வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.
ரூ.40 லட்சம் பறிமுதல்: இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் 4 இடங்கள், திருவண்ணாமலை - 4, கரூர் - 7, திண்டுக்கல் - 2, கோவை - 2, திருப்பூர் - 1 என மொத்தம் 20 இடங்களில் சோதனை நடந்தது. சோதனையின் போது, நெடுஞ்சாலைத் துறை தொடர்பான முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சான்றுகள், சொத்து மதிப்பு மற்றும் முறைகேட்டை உறுதிப்படுத்தும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேல் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
‘சட்டரீதியாக எதிர்கொள்வேன்’ - இதற்கிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எ.வ.வேலு, ‘‘அரசியல் உள்நோக்கத்துடன் லஞ்ச ஒழிப்புத் துறையினர் செயல்பட்டுள்ளனர். இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்’’ என்றார்.