

சென்னை: தவெக அரசுக்கு ஆதரவளித்துள்ள கூட்டணி கட்சிகளுடன் சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
தவெக தரப்பில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் பங்கேற்றனர். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ப.சிதம்பரம், பிரவீன் காந்தி, ஜோதிமணி, ராபர்ட் ப்ரூஸ், துரை வைகோ, நவாஸ் கனி, அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ்குமார், வன்னியரசு, ஷாஜகான், ஐயுஎம்எல் பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், விசிக துணை பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கவில்லை.
மாலை 4 மணிக்கு தொடங்கி 5 மணி வரை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது தவெக ஆதரவு கட்சிகளை ஒரு முறையான கூட்டணியாக உருவாக்க வேண்டும். இந்த கூட்டணிக்கு ஒரு பெயரைச் சூட்டி, அதற்கென ஒரு ஒருங்கிணைப்பு குழுவை நியமிக்க வேண்டும் எனத் தலைவர்கள் வலியுறுத்தி பேசினர். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைப்புக் குழுக்களை அமைத்து கூட்டணி கட்சிகளுக்கு இடையே அடிமட்ட அளவில் இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. மேலும், வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் இந்த கூட்டணி இணைந்து செயல்பட்டு வெற்றியை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து முதல்வர் விஜய், கூட்டணிக்காக தான் வைத்திருக்கும் பெயர் குறித்து தலைவர்களிடம் ஆலோசித்தார். மேலும், தவெக தலைமையிலான அரசு மதச்சார்பின்மை கொள்கையில் என்றும் உறுதியாக இருக்கும். லஞ்சம் மற்றும் ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியைத் தொடர்ந்து வழங்குவதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்படாது என விஜய் உறுதி அளித்தார்.
ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு கூட்டணி கட்சிகளின் சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியதாவது: இக்கூட்டத்தில் கூட்டணியைச் சிறப்பாக வழிநடத்த ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்க வேண்டும். கூட்டணிக்கென ஒரு பொதுவான செயல்பாட்டுத் திட்டத்தை வகுக்க வேண்டும். கூட்டணிக்கான பெயரைச் சூட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மிக விரைவில் நடைபெறவுள்ள அடுத்த கூட்டத்தில், மேற்கண்ட மூன்று விஷயங்கள் குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படும். கூட்டணிக்கான பெயர் கூடிய விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் விஜய் கூட்டத்தில் பேசும் போது, “தவெக ஆட்சி 2 மாதங்கள், 6 மாதங்கள் கூட நிலைக்காது என்றார்கள். ஆனால், இந்த ஆட்சி 5 ஆண்டுகள் வரை நீடிக்கும்’’ என்றார்.