

சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களிடம் அடிப்படை வசதி மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
சென்னை சைதாப்பேட்டையில் 10 தளங்கள் மற்றும் லிஃப்ட் வசதியுடன் ரூ.44 கோடி செலவில் கடந்த ஆட்சியில் எம்.சி.ராஜா மாணவர் விடுதி கட்டப்பட்டது. பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் இங்கு தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் விஜய், தலைமைச் செயலகத்தில் நேற்று பணிகளை முடித்துவிட்டு திடீரென எம்.சி.ராஜா மாணவர் விடுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, விடுதியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் மாணவர்களுக்கான தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். முதல்வரிடம் மாணவர்கள் தங்களின் கோரிக்கைகளை தெரிவித்தனர்.
அதன்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆய்வின்போது, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஏற்கெனவே, முதல்வர் விஜய் எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.