

கோவை: கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்டு்ள்ள பெரியார் அறிவுலகத்தை முதல்வர் விஜய் இன்று (16-ம் தேதி) காலை திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த வருகைப் பதிவேட்டில் முதல்வர் விஜய் முதல் கையெழுத்திட்டார். பின்னர் அறிவுலகத்தில் உள்ள படைப்புகளை அவர் பார்வையிட, அவருக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் விளக்கினர்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் இருந்து பெரியார் அறிவுலகம் வரை முதல்வர் விஜய் சாலைவலம் வந்தார். அப்போது சாலையின் இருபக்கத்திலும் திரண்டிருந்த தவெக தொண்டர்கள், பொது மக்கள் முதல்வரை நோக்கி கையசைத்து ஆர்ப்பரித்தனர்.
ரூ.301 கோடி மதிப்பில் ‘பெரியார் அறிவுலகம்’
தமிழக பொதுப்பணித்துறையின் சார்பில், கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் மத்திய பேருந்து நிலையம் எதிரே, சிறைத்துறைக்கு சொந்தமான இடத்தில், 6.98 ஏக்கர் பரப்பளவில், 1 லட்சத்து 98 ஆயிரம் சதுரடியில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் ரூ.301 கோடி மதிப்பில் ‘பெரியார் அறிவுலகம்’ எனப்படும் ‘பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம்’ கட்டப்பட்டுள்ளது. கடந்த 2024-ல் திமுக ஆட்சியில் பெரியார் அறிவுலக கட்டிடப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
கோவையில் முதல்வர் விஜய்
படம்: ஜெ.மனோகரன்
இதனைத் தொடர்ந்து பெரியார் அறிவுலகத்தின் திறப்பு விழா இன்று (அக்.16) நடைபெற்றது. இதில், முதல்வர் விஜய் கலந்து கொண்டு இம்மையத்தை திறந்து வைத்தார்.
மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையையும் முதல்வர் திறந்து வைத்தார். பின்னர், முடிவுற்ற திட்டப்பணிகளை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்த முதல்வர் விஜய் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், ராஜ்மோகன், சம்பத்குமார், விக்னேஷ் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.