

மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்.
மதுரை: மதுரையில் ரூ.10.25 கோடியில் புதுப்பிக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் நேற்று திறந்து வைத்தார்.
மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகம், ஒலி-ஒளி காட்சி அரங்கம், ஆவணப்படத்தை காணும் வகையிலான ஏவி தியேட்டர்கள், டிஜிட்டல் திரை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் ரூ.10.25 கோடியில் புதுப்பிக்கப்பட்டது.
தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தை தொடங்கிவைக்க முதல்வர் விஜய் மதுரைக்கு வரும்போது, புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை திறந்துவைப்பார் என அறிவிக்கப்பட்டது.
காந்தி சிலைக்கு மரியாதை அதன்படி, நேற்று பிற்பகல் 1 மணியளவில் அருங்காட்சியகத்துக்கு வந்த முதல்வர் விஜய்க்கு அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் காந்தி சிலை, புத்தகங்களை பரிசளித்து வரவேற்றனர்.
அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்ட அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.
அமைச்சர்கள் சி.டி.ஆர்.நிர்மல்குமார், பெ.விஸ்வநாதன், காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி., சு.வெங்கடேசன் எம்.பி., எம்எல்ஏக்கள் கார்த்திகேயன், கல்லாணை, கோபிசன், கருப்பையா, மதார் பதுருதீன், தலைமைச் செயலர் சாய்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆவணப் படம் திரையிடல்
பின்னர், அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்களை முதல்வர் பார்வையிட்டார். ‘மதுரையும் காந்தியும்’ என்ற தலைப்பிலான ஆவணப் படம் திரையிடப்பட்டது. பின்னர், அங்குள்ள ஆவணக் குறிப்பேட்டில் ‘very happy to love visited this holy place’ என எழுதி முதல்வர் கையெழுத்திட்டார்.
மதுரை - மகாத்மா காந்தி தொடர்பு
1921-ல் காந்தியடிகள் மதுரை வந்தபோதுதான் ‘அரை ஆடைக்கு மாறினார். 1934-ல் மதுரைக்கு காந்தி வந்த பிறகுதான் ஆலயப்பிரவேசம் இயக்கம் உத்வேகம் பெற்றது. அடுத்த சில ஆண்டுகளில் மீனாட்சி அம்மன் கோயிலில் அனைத்து சமூகத்தினரையும் அனுமதித்த வரலாறும் நடந்தது.
காந்தி மரணத்துக்குப் பின்பு ‘அகில இந்திய காந்தி நினைவு நிதி’ நிறுவனத்தின் முயற்சியால் நாட்டின் 7 இடங்களில் காந்தி நினைவு அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட்டன.
அதில், மதுரையில்தான் முதல்முறையாக காந்தி நினைவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இதற்கு முன்பு இந்த இடம் 1670-ல் ராணி மங்கம்மாள் கட்டிய கோடைகால அரண் மனையாக இருந்தது. பின்பு ஆங்கிலேயர் ஆட்சியில் மாவட்ட ஆட்சியர்கள், நீதிபதிகள் இல்லமாக இருந்தது.
13 ஏக்கர் பரப்புள்ள இந்த இடத்தை, தமிழக அரசு 1955-ம் ஆண்டு அகில இந்திய காந்தி நினைவு நிதி வசம் ஒப்படைத்தது. இங்கு அமைக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தை 14.4.1959-ல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.