

முதல்வர் விஜய்யின் கான்வாய் செல்லும் போது, போக்குவரத்து நெரிசலால், சாலையில் பொது மக்கள் அவதிப்படுவதை தவிர்க்க 'டியூன் லைன்' முறையில் தனிப் பாதை ஏற்படுத்தப்பட்டு முதல்வரின் கான்வாய் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றது முதல், தவெக தலைவர் விஜய் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சினிமா படப்பிடிப்புத் தளங்களுக்குச் சொன்ன நேரத்துக்கு முன்பே வந்து நிற்கும் அதே பழக்கத்தை, இப்போது சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கும் கொண்டு வந்துள்ளார் முதல்வர் விஜய்.
ஒரு சாதாரண அரசு ஊழியரைப் போல தினமும் காலையிலேயே தலைமைச் செயலகத்துக்கு ஆஜராகி விடுகிறார். நீலாங்கரையில் இருக்கும் தனது வீட்டிலிருந்து 17 கி.மீ. தூரம் பயணித்து தான் முதல்வர் விஜய் தலைமை செயலகம் வரவேண்டும்.
இதனால், சாலைகளில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு பொது மக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது முதல்வரின் கவனத்துக்கு சென்ற நிலையில், தனது பயணத்தால் ஒரு நிமிடம் கூட சாமானிய மக்கள் சாலையில் காத்திருக்கக் கூடாது என, அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து, டியூன் லைன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நீலாங்கரை முதல் தலைமைச் செயலகம் வரை சாலையின் ஒரு பகுதியில் மட்டும் 'கூம் புகள் வைக்கப்பட்டு, முதல்வரின் கான்வாய்க்காகத் தனி வழி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், முதல்வரின் கார் அணிவகுப்பு சென்றாலும், மறுபக்கம் மற்ற வாகனங்கள் எங்கும் நிறுத்தப்படுவதில்லை. சிக்னல்களில் பொதுமக்கள் தேவையின்றி காக்க வைக்கப்படுவதில்லை. முதல்வர் அந்த பகுதியை கடந்த பிறகு, அந்த கூம்புகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, மீண்டும் வழக்கமான போக்குவரத்தை போலீஸார் அனுமதிக்கின்றனர்.
கடந்த காலங்களில் மெரினா காமராஜர் சாலையில் மட்டுமே இருந்த இந்த நடைமுறை, தற்போது நீலாங்கரை வரை கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், முதல்வர் வரும் போது சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர். இதனால் காவல் துறைக்கு ஏற்படும் பணிச் சுமையைக் குறைக்கும் வகையில், தனது வீட்டை நீலாங்கரையிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றவும் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.