

தாராபுரம்: தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் 2 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் அக்.6-ம் தேதி நடக்கிறது. திமுக, அதிமுக, தவெக, நாதக, இந்திய கம்யூனிஸ்ட் உள்பட 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பிரதான கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்யும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
பொதுக்கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்ட அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ் உள்ளிட்டோர்.
இந்நிலையில், தவெக தலைவரும் முதல்வருமான விஜய், வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து, செப். 30-ம் தேதி தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மேலும் வாக்குசேகரிப்பு இறுதி நாளான அக்.4-ம்தேதி ரோடு ஷோ நடத்தி வாக்கு சேக ரிக்க உள்ளதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்தனர்.இதையொட்டி பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்காக தாராபுரம்- உடுமலை சாலையில் சுமார் 54 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்குமார் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முகாமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.