

குட்கா கடத்தல்காரர்களின் கார் மீது தொற்றியபடி சென்ற கோவை தலைமைக் காவலர் வேல்முருகனை, முதல்வர் விஜய் நேரில் அழைத்துப் பாராட்டிப் பரிசு வழங்கினார். உடன் தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்.
சென்னை: கோவையில் குட்கா கடத்தலைத் தடுக்க உயிரைப் பணயம் வைத்து கார் மீது தொற்றி சென்ற தலைமைக் காவலர் வேல்முருகனை, முதல்வர் விஜய் நேரில் அழைத்துப் பாராட்டி பரிசும் வழங்கினார்.
கோவை அருகே கோவில்பாளையம் பகுதியில் கடந்த 27-ம் தேதி காலை போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது கர்நாடக மாநில பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்று வந்தது. அங்கிருந்த தலைமை காவலர் வேல்முருகன் தலைமையிலான போலீஸார் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் 3 பேர் இருந்தனர். காரின் பின்பக்கம் சில மூட்டைகள் இருந்தன.
போலீஸார் காரை சோதித்துக் கொண்டிருந்த போது, கண்ணிமைக்கும் நேரத்தில் கார் வேகமாக சென்றது. சுதாரித்துக் கொண்ட தலைமைக் காவலர் வேல்முருகன் காரின் மீது சட்டென்று குதித்து காரின் மேல் ஏறினார். வாகனம் நிற்காமல் சென்ற தால், காரின் மேல் பகுதியில் படுத்துக் கொண்டு அதில் இருந்த பிடியை இறுக்கமாக பற்றிக் கொண்டார்.
கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கார் அசுர வேகத்தில் பறந்தது. நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சோதனைச் சாவடியில் இருந்த சக போலீஸார் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட போலீஸாரை உஷார்படுத்தினர். காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருந்ததால் கார் வேகமாக சென்றது. மேலும் விளாங்குறிச்சி, கணியூர் சுங்கச்சாவடிகளிலும் நிற்காமல் சென்றது.
இதையடுத்து அவிநாசி போலீஸாருக்கு கோவை போலீஸார் தகவல் அளித்தனர். அவர்கள் முன்னெச்சரிக்கையாகத் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மற்ற வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை செயற்கையாக உண்டாக்கினர். அப்போது காரில் வந்த கும்பல், போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இதையடுத்து காரை நிறுத்திவிட்டு 3 பேரும் இறங்கி ஓட முயன்றனர். அவர்களை அங்கு காத்துக் கொண்டிருந்த போலீஸார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
காரில் மேல் பகுதியில் குற்றவாளி களைத் துணிச்சலாகப் பிடிக்க முயன்ற தலைமைக் காவலர் வேல்முருகனையும் மீட்டனர். தொடர்ந்து 3 பேரிடம் போலீஸார் விசாரித்தபோது , அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்து கோவையில் விற்பனை செய்ய முயன்றதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து சுரேஷ் (20), ராஜேஷ் (23), பாபாதரம் (27) ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் காரில் வைத்திருந்த 233 கிலோ புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்தனர். தலைமைக் காவலர் வேல்முருகன் (38) சுமார் 40 கி.மீ. தூரம் உயிரைப் பணயம் வைத்து, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பிடித்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உயிரைப் பணயம் வைத்து குட்கா கடத்தலைத் தடுத்த தலைமைக் காவலர் வேல்முருகனை நேரில் அழைத்து முதல்வர் விஜய் பாராட்டினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கோயம்புத்தூர் மாவட்டம், கணியூர் சுங்கச்சாவடி அருகே கடந்த 27-ம் தேதி, தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்திச் செல்லும் போது தலைமைக் காவலர் ம.வேல்முருகன், கண் இமைக்கும் நேரத்தில் அந்தக் காரின் மேற்கூரையின் மீது தாவி ஏறினார்.
காரின் மேற்கூரையில் காவலர் தொற்றிக் கொண்டிருப்பதைப் பொருட்படுத்தாமல், கடத்தல்காரர்கள் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றனர். விளாங்குறிச்சியில் இருந்து அவிநாசி வரை சுமார் 40 கி.மீ. தூரத்துக்குத் தனது உயிரைப் பணயம் வைத்து காரின் மேற்கூரையில் படுத்தபடியே காவலர் வேல்முருகன் பயணம் செய்தார். பின்னர், கூடுதல் போலீஸார் விரைந்து வந்து அந்தக் காரை மடக்கிப் பிடித்தனர். தலைமைக் காவலர் வேல்முருகனின் இந்தத் துணிச்சலான செயல், காவல் துறையினராலும் பொதுமக்களாலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
உயிரைப் பணயம் வைத்து கடத்தல்காரர்களைப் பிடிக்கக் காரணமாக இருந்த தலைமைக் காவலர் வேல்முருகனை, முதல்வர் விஜய் நேற்று தலைமைச் செயலகத்துக்கு நேரில் அழைத்துப் பாராட்டினார். அவருக்குப் பரிசு வழங்கி கவுரவித்த முதல்வர், பணியின் போது கவனமாகவும் பாதுகாப்பாகவும் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்நிகழ்வின் போது டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உடனிருந்தார். இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.