

சென்னை: ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் வலுதூக்குதல் மற்றும் பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவுகளில் கூறியிருப்பதாவது: ஜப்பானில் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பெண்களுக்கான வலுதூக்குதல் போட்டியில் 67 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை கஸ்தூரி ராஜாமணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது சாதனையை பாராட்டும் வகையில் தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். வீராங்கனை கஸ்தூரி ராஜாமணியின் தன்னம்பிக்கை, அயராத உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம் பெற்றுள்ள இம்மகத்தான வெற்றி, தமிழகத்தின் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். அவர் தொடர்ந்து பல வெற்றிகளை பெற்று தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் விளையாட்டில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் சிவராஜன் சோலைமலைக்கும் முதல்வர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது சமூகவலைத்தள பதிவு:
சிவராஜன் சோலமலையின் சாதனையை பாராட்டும் வகையில் தமிழக அரசின் சார்பில ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும். அவரது கடின உழைப்பு, விடாமுயற்சியால் இச் சாதனையைப் படைத்துள்ளார் அவர் மேலும் பல வெற்றிகளை பெற்று தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள். இவ்வாறு கூறியுள்ளார்.