

சென்னை: கோவை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.மூன்று லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: "சேலம் மாவட்டம் காடையம்பட்டியைச் சேர்ந்த தனபால், தனது மனைவி மேனகா (35), இவர்களது மகள் கனிஷ்கா (17), மகன் சுர்ஜித் (12) மற்றும் மேனகாவின் சகோதரியின் மகள் சினேகா (23), ஆகிய ஐந்து நபர்கள் காரில் பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி சென்றுள்ளனர்.
அப்போது, பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அதிவேகமாக வந்த சரக்கு லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், தனபால், மேனகா, சினேகா மற்றும் சிறுமி கனிஷ்கா ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த சுர்ஜித்துக்கு முதலுதவி அளிக்கப்பட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.மூன்று லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் சுர்ஜித்-க்கு ஒரு லட்சம் ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.