வினாத்தாள் கசிந்த விவகாரம்: நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய அன்புமணி கோரிக்கை

வினாத்தாள் கசிந்த விவகாரம்: நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய அன்புமணி கோரிக்கை
Updated on
2 min read

சென்னை: நீட் தேர்வை மத்திய அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு வினாக்கள் கசிந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "2026- 27-ம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்காக கடந்த மே 3-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் கேட்கப்பட்ட 200 வினாக்களில் 80%-க்கும் கூடுதலான வினாக்கள் தேர்வுக்கு பல நாள்கள் முன்பே ராஜஸ்தானில் வெளியாகி விட்டதாகவும், இது தொடர்பாக அம்மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரிப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மருத்துவம் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த விஷயத்தில் தேசிய தேர்வு முகமை தொடர்ந்து அலட்சியமாக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.

உத்தேச வினாக்கள் தொகுப்பு என்ற பெயரில் கைகளால் எழுதப்பட்ட 410 வினாக்கள் கொண்ட ஆவணம் நீட் தேர்வுக்கு 15 முதல் 30 நாட்களுக்கு முன்பாகவே மாணவர்களிடம் பரவியதாகவும், தேர்வுக்கு 42 மணி நேரம் முன்பாக வாட்ஸ்- அப் மூலம் ராஜஸ்தான் மற்றும் பிற வட மாநிலங்களில் மின்னல் வேகத்தில் பரவியதாகவும் கூறப்படுகிறது. அதில் உள்ள வினாக்களை மட்டும் படித்திருந்தால் நீட் தேர்வில் 720-க்கு குறைந்தது 600 மதிப்பெண்களை எடுக்க முடியும் என்று கூறியுள்ள ராஜஸ்தான் காவல்துறை, இது தொடர்பாக 13 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது. நீட் வினாக்கள் கசிந்ததை தேசிய தேர்வு முகமை மறுக்கவில்லை.

நீட் தேர்வு வினாக்கள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுவது இது முதல் முறையல்ல. நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் வினாத்தாள் கசிவது, விடைத் தாள்களை மதிப்பீடு செய்வதில் குளறுபடிகள், தேர்வில் ஆள் மாறாட்டம் என ஏதாவது ஒரு முறைகேடு நடப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால், நீட் தேர்வு தொடர்பாக இதுவரை எழுப்பப்பட்ட குற்றச் சாட்டுகளுக்கு தேசியத் தேர்வு முகமை தரப்பில் திருப்தியளிக்கும் வகையில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. நடப்பாண்டிலும் வினாக்கள் கசிந்தது குறித்த சர்ச்சையை மூடி மறைக்கவே முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா முழுவதும் சுமார் ஒரு லட்சம் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 20 முதல் 22 லட்சம் மாணவர்கள் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் ஏதேனும் ஒரு முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுவதையும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததையும் பார்க்கும் போது முறைகேடான வழிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கை ஊக்குவிக்கப்படுகிறதோ ? என்ற ஐயம் எழுகிறது. இந்த ஐயத்தைப் போக்க வேண்டியது தேசியத் தேர்வு முகமையின் முக்கியக் கடமை ஆகும்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு மையங்களில் மாணவர்களை சோதனை என்ற பெயரில் கொடுமைப் படுத்துகின்றனர்; பல இடங்களில் மாணவிகள் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு கூனிக் குறுக வேண்டியுள்ளது. தேவையே இல்லாமல் இத்தகைய சோதனைகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையால் தேர்வுக்கான வினாக்களை பாதுகாத்து வைக்க முடியாதா ? அவ்வாறு பாதுகாக்க முடியவில்லை என்றால் எதற்காக நீட் தேர்வை நடத்த வேண்டும் ?

தனியார் நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் விலை வைத்து விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதும் தான் அதன் நோக்கங்கள் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் கடந்த ஆண்டு வரையிலான 9 ஆண்டுகளில் ஓராண்டில் கூட இந்த நோக்கங்கள் நிறைவேற்றப் படவில்லை.

மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட நீட் தேர்வே வணிகமயமாகி விட்டது என்பது தான் உண்மை. நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கான பயிற்சி ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் ஈட்டித் தரும் வணிகமாகி விட்டது. அதனால் மருத்துவப் படிப்பு ஏழைகளுக்கு எட்டாக் கனியாகி வருகிறது. இன்னொரு பக்கம் நீட் அச்சத்தால் மாணவர்களின் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன.

இப்படியாக யாருக்கும், எந்த வகையிலும் பயனளிக்காத, எதிர்மறையான விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தக் கூடிய நீட் தேர்வு இனியும் தேவையில்லை. எனவே, நீட் தேர்வை மத்திய அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு வினாக்கள் கசிந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி , அதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

வினாத்தாள் கசிந்த விவகாரம்: நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய அன்புமணி கோரிக்கை
717 மதுக்கடைகள் மூடப்படுவது வரவேற்கத்தக்கது: முதல்வருக்கு அன்புமணி பாராட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in