

சென்னை: “திமுக, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் என்ற பெயர்களை சொல்வதென்றால் அபரிமிதமான பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படுகிறதா முதல்வரே?” என்று திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “திமுக, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் என்ற பெயர்களை சொல்வதென்றால் அபரிமிதமான பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படுகிறதா முதல்வரே. கடந்த 1970, மார்ச் 10-ம் தேதி மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்தை மாநிலப் பாடலாகவும், 23.11.1970-ல் அனைத்து அரசு விழாக்களிலும் முதலில் பாடப்படவேண்டும் என்றும் அரசாணை வெளியிட்டவர் கருணாநிதி.
இந்த அங்கீகாரத்தை திமுக அரசுதான் கொடுத்தது என்று சொல்லக்கூட திராணியில்லாமல் 70-களில் கொண்டுவரப்பட்டது என்று பொதுவாக பேசி நழுவுவதைப் பார்க்கும்போது எந்த அளவுக்கு இந்த ரீல்ஸ் அரசுக்கு திமுக அரசின் சாதனைகள் மீது காழ்ப்புணர்வு உள்ளது என்பது வெட்டவெளிச்சமாகிறது. 2021 டிசம்பர் 17-ம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்தை மாநிலப் பாடலாக அங்கீகரித்து அனைத்து அரசு மற்றும் பொது நிகழ்வுகளிலும் முதலில் பாடவேண்டும் என்று அரசாணை வெளியிட்டவர் அப்போதைய முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்தான் உயிர் மூச்சு என்று வசனம் பேசும் முதல்வர், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாமிடம் அளிக்க சுற்றறிக்கை அனுப்பிய ஆளுநரையும், ஆளுநரின் சொல்லை மட்டுமே கேட்போம் என்று சொன்ன மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நிர்வாகிகளையும் ஏன் கண்டிக்கவில்லை ?
தமிழ் என்றால் கெத்து. தமிழ் என்றால் பவர் என்று தமிழை போற்றுவதற்குக் கூட ஆங்கிலத்தில் வார்த்தையைத் தேடுவது வேடிக்கையாக உள்ளது. நீங்கள் இன்று கொண்டுவந்துள்ள தனித்தீர்மானத்தை சென்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே கொண்டு வந்திருக்கலாமே.
திமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியதைப் போல எங்கள் உரிமைப் போராட்ட வரலாற்றுக்கு ஸ்டிக்கர் அடிக்க நினைக்காதீர்கள். ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறையாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.