

சென்னை: பாலியல் குற்ற வழக்குகளை விரைவாக, முறையாக நடத்தி, கடும் தண்டனை பெற்றுத் தருவது குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவோரைத் தடுக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று அரசு ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் விஜய் தலைமையில் இன்று (மே 25) தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், வழக்குகளை விரைவுபடுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் காவல் துறை, சமூக நலத் துறை மற்றும் அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பாலியல் குற்ற வழக்குகளை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர முதல்வர் வலியுறுத்தினார். வழக்குகளை முறையாக நடத்தி, கடும் தண்டனை பெற்றுத் தருவது குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவோரைத் தடுக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் மரியம் பல்லவி பல்தேவ், காவல் துறை தலைமை இயக்குநர் டாக்டர் சந்தீப் ராய் ரத்தோர், காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) முனைவர் மஹேஷ்வர் தயாள், காவல் துறை கூடுதல் இயக்குநர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) அனிதா ஹுசைன், காவல் துறை தலைவர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) சி. ராஜேஸ்வரி, காவல் துறை தலைவர் (நுண்ணறிவு) ஆஸ்ரா கர்க், காவல் துறை தலைவர் (சிங்கப்பெண்) கே.பவானீஸ்வரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதிரவைத்த கோவை சம்பவம்:
கோவை மாவட்டத்தில் வசித்து வந்த தம்பதியின் 10 வயது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், போக்குவரத்து அமைச்சர் பார்த்திபன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைஅமைச்சர் சம்பத்குமார் சேலம் மாவட்டத்தில் நேற்று சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர். போக்சோ நீதிமன்ற உத்தரவின்பேரில், தமிழக அரசு சார்பில் ரூ.7 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.
இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான திமுக கடும் கண்டனங்களை பதிவு செய்தது.
இன்று காலையில்கூட திமுக எம்.பி. கனிமொழி, “குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என யாருக்கும் பாதுப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு. சட்டம் - ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளதை, இந்த புதிய அரசு அறிந்துள்ளதா என்பதே சந்தேகமாகவுள்ளது” என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், வழக்குகளை விரைவுபடுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், காவல் துறை, சமூகநலத் துறை மற்றும் அரசு தலைமை வழக்கறிஞருடன் முதல்வர் விஜய் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.