

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு நிர்வாகிகள் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து அமையவுள்ள திமுக 2.0 ஆட்சியில் அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ஜனவரியில் அரசு அறிவித்தது. இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் ஸ்டாலின் பேசியதாவது: கருணாநிதி ஆட்சிக்காலம்தான் அரசு ஊழியர்களின் பொற்காலம். அரசு ஊழியர் நடத்தை விதிமுறைகளில் ரகசிய குறிப்பேடு முறை நீக்கம், குடும்ப பாதுகாப்பு நிதி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு வழங்கியுள்ளது. அரசு ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரே இயக்கம் திமுகதான். பள்ளிக்கல்வியில் இந்தியாவிலேயே 2-வது சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்க நீங்களே காரணம். காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் தமிழக அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கவும் நீங்களே காரணம்.
தமிழகத்துக்கான வரி பங்கீட்டை மத்திய அரசு குறைத்து வருகிறது. ஜிஎஸ்டி நடைமுறையால் மாநில அரசு வரிவருவாய் குறைந்து கொண்டே செல்கிறது. இப்படிப்பட சூழலில் நலத்திட்டங்களையும் செயல்படுத்தியாக வேண்டியுள்ளது. திட்டமிட்டே நிதி நெருக்கடியை உருவாக்குகிறார்கள். நிதி நெருக்கடியையும், நிர்வாக நெருக்கடியையும் சமாளித்துதான் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளோம். அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசு ஊழியர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தால் அரசு கூடுதலாக ரூ. 13 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும். மேலும் ஆண்டுதோறும் ரூ.11 ஆயிரம் கோடிஅரசின் பங்களிப்பாக வழங்கவேண்டும். நாங்கள் சொன்னதைச்செய்வோம். தொடர்ந்து அமையவுள்ள திமுக 2.0 ஆட்சியில் அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிச்சயம் நிறைவேற்றுவோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
விழாவில், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தாஸ், மு.பாஸ்கரன், கு.தியாகராஜன், ஒருங்கிணைப்பாளர் அ.வின்சென்ட் பால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.