

சென்னை: தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் சந்திக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டிட்வா புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் நெற்பயிர்கள், வாழை, கரும்பு, வெற்றிலை உள்ளிட்ட பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை, பப்பாளி மரங்கள் சேதமடைந்துள்ளன.
திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நெல் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
பல காரணங்களால் பயிர்க் காப்பீடு செய்ய முடியாத நிலை உள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட குடிமராமத்துப் பணி திட்டத்தால் தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இந்த பணியை திமுக அரசு நிறுத்திவிட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
கனமழையால் ராமேசுவரம் நகரமே் மூழ்கி, மக்கள் தத்தளிக்கின்றனர். அவர்களது துயரைத் துடைக்காமல் முதல்வர் வாக்கிங்போகும் போது நடிகையுடன் பேசுவதை வலைதளத்தில் பதிவிடுகிறார். கன்ட்ரோல் ரூமில் உட்கார்ந்து ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது. பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் சந்திக்கச் சென்றால்தான், கீழே பணியாற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளும் விரைந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.