‘தில்’ இருந்தால் வழக்குப் போட்டு நிரூபிக்கட்டும்! - திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் சவால் | நேர்காணல்
தொலைக்காட்சி விவாதங்களில் திமுக-வின் குரலாக சட்ட ரீதியிலான விளக்கங்களுடன், அன்றாட அரசியல் நிகழ்வுகளை அலசி ஆராய்பவர் ஏ.சரவணன். திமுக செய்தி தொடர்பாளரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான அவரிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காகப் பேசினோம்.
அரசியலுக்கு புதிய வரவான விஜய் இம்முறை திமுக-வுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்துவார் போலிருக்கிறதே..?
விஜய் சினிமா கவர்ச்சியை விட்டு இன்னும் முழுமையாக வெளியே வரவில்லை. திரையில் பேசுவது போல வீரவசனம் பேசி வருகிறார். எங்குமே விலைபோகாதவர்களை எல்லாம் கட்சியில் சேர்த்துக் கொண்டு ‘நானும் ரவுடிதான்’ என்கிற ரீதியில் அரசியல் கோதாவில் குதித்துள்ளார். அவரது வருகை எந்த வகையிலும் திமுக-வுக்கு பலவீனத்தை ஏற்படுத்தாது.
மாறாக, அது அதிமுக-வுக்குத்தான் பலவீனம். திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் 70 முதல் 80 சதவீத நிரந்தர வாக்குவங்கி உள்ளது. எஞ்சியவர்கள் தான் பிற கட்சிகளுக்கு வாக்களிப்பவர்கள். திமுக, அதிமுக-வுக்கு மாற்று நாங்கள் என்று சொன்ன விஜயகாந்த், சீமான் போன்றவர்களால் கூட தமிழகத்தின் இந்த மெயின் ஸ்ட்ரீமை ஒன்றும் செய்ய முடியவில்லை. விஜய் ஒரு மாய பிம்பம் என்பதால் அவராலும் ஒன்றும் செய்ய முடியாது.
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையை திமுக ஆட்சேபிப்பது ஏன்?
கரூர் சம்பவத்தைப் போல் இன்னொரு சம்பவம் நடக்கக்கூடாது. அதற்காக, அந்த சம்பவத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் அப்படியே மடைமாற்றம் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம், அண்ணாநகர் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல வழக்குகளில் தமிழக போலீஸாரின் செயல்பாடுகளை உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் மனதாரப் பாராட்டியுள்ளன.
காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர், தமிழக போலீஸாரின் இமேஜை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்கமாட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரிப்பதால் எங்களுக்கு எந்தப் பாதகமும் கிடையாது. ஆனால், மத்திய புலனாய்வு விசாரணை அமைப்புகள் பலநேரங்களில் சிலரது ஏவல் துறையாக மாறிவிடுகின்றனவே.
தவெக-வுக்கும் திமுக-வுக்கும் தான் போட்டி என்கிறாரே விஜய்?
ஒருபக்கம், பாஜக-வையும் திமுக-வையும் கடுமையாகச் சாடும் விஜய், மறுபக்கம் பாஜக அங்கம் வகிக்கும் புதுச்சேரி அரசை நல்லாட்சி என்கிறார். தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக திமுக-வை வம்பிழுக்கும் விஜய், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாயே திறக்கவில்லை. இதனால் தான் தவெக-வை பாஜக-வின் பி டீம் என்கிறோம்.
விஜய்யின் திறமையின்மையும் இயலாமையும் வெளியே தெரிந்துவிட்டால் ஜீரோவாகி விடுவார் என்பதால் தான் அவருடன் இருப்பவர்கள் அவரை பொத்திப் பொத்தி பாதுகாத்து வருகின்றனர். விஜய் 10 நாள் தொடர்ச்சியாக வீட்டை விட்டு வெளியே வந்து மக்கள் மன்றத்தில் பரப்புரை செய்யட்டும். 11-வது நாள் ஒருவர் கூட அவருடன் இருக்கமாட்டார்கள்.
திமுக அரசுக்கு எதிராக பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பலமான ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனவே..?
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் 16 சதவீதம் பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு மக்கள் நல திட்டங்களை காப்பியடித்து பாஜக ஆளும் மாநிலங்களில் அமல்படுத்துகின்றனர்.
இத்தனைக்கும் தமிழகத்துக்கு தரவேண்டிய எந்த நிதியையும் தர முடியாது என ஆளுநரை வைத்து அரசியல் செய்கின்றனர். எதையெல்லாம் செய்ய முடியாது எனக்கூறினார்களோ, அவற்றை வெற்றிகரமாக தடைகளை தாண்டி செய்து காட்டியுள்ளோம். அதிமுக-வின் விஞ்ஞானபூர்வ ஊழலை மக்கள் மன்றத்தில் வெளிச்சம் போட்டு காண்பித்து சட்டப்படி வழக்கு தொடர்ந்து முறைப்படி தண்டனை வாங்கி கொடுத்துள்ளோம். அந்த ‘தில்’ இருந்தால் திமுக மீதும் முறைப்படி வழக்கு தொடர்ந்து நிரூபித்துக் காட்டட்டும்.
பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்கிறதே பாஜக..?
பிஹார் தேர்தல் களத்தை தமிழகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. தமிழகத்தில் இண்டியா கூட்டணி முன்பை விட இப்போதுதான் அதிக ஸ்திரத்தன்மையுடன் உள்ளது. பிஹார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆளும் கட்சியே மீண்டும் அரியணை ஏறியுள்ளது. அதேபோல் தமிழகத்தில் திமுக-வும் 7-வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும்.
மத்திய - மாநில அரசுகளுக்கு இடையில் சரியான புரிதல் இல்லாததால் தான், தமிழக அரசு தொட்டது அனைத்துக்கும் நீதிமன்றப் படிக்கட்டுகளை மிதிக்க வேண்டி இருக்கிறதோ?
மத்திய பாஜக அரசு, பாஜக ஆளும் மாநிலங்களில் ஒருவிதமான மென்மையான போக்குடனும், அதுவே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்றால் வஞ்சிக்கும் மனப்பான்மையுடனும் நடந்து வருகிறது. தமிழக மக்களுக்கு சூடு, சொரணை அதிகம்.
யார் தங்களின் உரிமைக்காக குரல் கொடுக்கிறார்களோ அவர்களைத் தான் தேர்வு செய்வார்கள். தமிழகத்தின் நலனை குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கும் பாஜக-வுடன் அதிமுக-வும் தனது சுயலாபத்துக்காக கூட்டணி வைத்து தமிழகத்தை ஏமாற்றி வருகிறது. ஆகவே தான் திமுக அரசு, கல்வி உள்ளிட்ட ஒவ்வொரு உரிமைகளுக்காகவும் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி வெற்றிபெற்று வருகிறது.
ஒருவேளை, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து நின்று எதிர்த்தால் அப்போதும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறுமா?
அப்படியொரு கூட்டணி அமைந்தால் அது குதிரைக்கு கொம்பு முளைத்த கதைதான். பல கூட்டு அவியல் படையலுக்கு நன்றாக இருக்கும். அரசியல் என்ற பரீட்சைக்கு ஒத்துவராது. திமுக-வின் கொள்கை கூட்டணி ஸ்திரமாக உள்ளது. அண்ணாமலை போன்றவர்கள் திமுக-வுக்கு எதிராக சென்சேஷனலாக பேசி திமுக-வின் வாக்கு வங்கியை கவர்ந்து விடலாம் என நினைக்கின்றனர். அவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது.
