உணவகங்கள், தேநீர் கடைகளுக்கு யூனிட் ஒன்றுக்கு மின்கட்டணத்தில் ரூ.2 சலுகை

மானியக் கடன் திட்டங்களையும் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
உணவகங்கள், தேநீர் கடைகளுக்கு யூனிட் ஒன்றுக்கு மின்கட்டணத்தில் ரூ.2 சலுகை
Updated on
2 min read

சென்னை: சமையல் எரிவாயு பற்றாக்குறையால் ஏற்படும் கூடுதல் மின்தேவையை சமாளிக்க உணவகங்கள், தேநீர் கடைகளுக்கு யூனிட்டுக்கு ரூ.2 மானியம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மானியக் கடன் திட்டங்களையும் அறிவித்துள்ளார்.

வளைகுடா போர் பதற்றம் காரணமாக, அங்கிருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய், எரிவாயு வருவது தடைபட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் எரிவாயு பற்றாக்குறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. இதில் தொழில், வர்த்தக கூட்டமைப்பு சங்கங்கள், தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை பல கோரிக்கைகளை வலியுறுத்தின.

இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறை செயலர்களுடன் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவுகள் விவரம்:

உணவகங்கள், தேநீர் கடைகள், கிளவுட் கிச்சன் உள்ளிட்ட உணவு உற்பத்தி தொழிற்கூடங்கள் எரிவாயுவுக்கு (LPG) பதிலாக மின் அடுப்புகளை பயன்படுத்தும்போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்வுக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும்.

எரிவாயு பயன்படுத்தும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் உள்ளிட்ட மின் உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (UYEGP) கீழ், 25 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் மானியத்துடன் கடன் வழங்கப்படும். அதேபோல, தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 25 சதவீதம் அல்லது ரூ.2 லட்சம் மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் 35 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.1 கோடி வரை மானியத்துடன் கடன் வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள 60,698 தொழிற்சாலைகள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் ஒப்புதல் (CTE/CTO) பெற்று, எல்பிஜி, சிஎன்ஜி, டீசல், ஃபர்னஸ் ஆயில், விறகு போன்றவற்றை எரிபொருளாகப் பயன்படுத்தி இயங்கி வருகின்றன. இதற்கு மாற்றாக மண்ணெண்ணெய், ஆர்டிஎப், எச்எஸ்டி, பயோமாஸ் போன்றவற்றை இந்த நிறுவனங்கள் எரிபொருளாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஒப்புதல் தேவையில்லை, தகவல் தெரிவித்தால் போதும்.

மத்திய அரசு அறிவித்துள்ள எரிவாயு பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் வரை இந்த சலுகைகள் வழங்கப்படும்.

தமிழகம் முழுவதும் 9,300 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக தினசரி 55 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து கையாளும் திறன் உள்ளது. தற்போதைய இடர்பாட்டால் மீதமாகும் பாலை, உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆவின் பால் கூட்டுறவு சங்கங்கள் கட்டுப்பாடின்றி பெற உத்தரவிடப்பட்டுள்ளது.

எரிவாயு (LPG) பற்றாக்குறையால் உணவகங்கள் மூடப்படும் சூழலில், காய்கறி விற்பனை பாதிக்கப்படலாம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள், பழங்களை 194 உழவர் சந்தைகளில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

வணிக நிறுவனங்களுக்கு முறையாக எல்பிஜி சிலிண்டர் ஒதுக்கப்படுவதை மாநில அளவில் தலைமைச் செயலர் கண்காணிப்பில் அரசு உயர் அதிகாரிகள் கொண்ட குழுவும், மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் எண்ணெய் விநியோக நிறுவனங்களின் பொறுப்பு அலுவலர்கள் கொண்ட குழுவும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மாதம் பொது விநியோகத் திட்டத்துக்கு கூடுதலாக 3,228 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்பின்னர், செய்தியாளர்களிடம் அரசு செய்தித் தொடர்பு அதிகாரியும், மின்வாரியத் தலைவருமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியபோது, ‘‘ஓட்டல்கள், பதிவு செய்யப்படாத உணவகங்கள், தேநீர் கடைகள், கிளவுட் கிச்சன் உள்ளிட்ட அனைத்து வகை உணவகங்களிலும் மின்சார அடுப்பு பயன்படுத்தும்போது, கடந்த

மாதத்தைவிட கூடுதலாக மின்கட்டணம் வந்தால் மானியம் வழங்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் எம்.அண்ணாதுரை கூறும்போது, ‘‘வதந்திகளை நம்பி கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் வாடிக்கையாளர்கள் ஒன்றுக்கு இரண்டு மடங்கு பெட்ரோல் வாங்கிச் சென்றனர். இதனால், பெட்ரோல் விற்பனை 100 சதவீதமும், டீசல் விற்பனை 75 சதவீதமும் ஒரே நாளில் அதிகரித்துள்ளது. ஆனால், 14-ம் தேதி (நேற்று) கூட்டம் குறைந்துவிட்டது. தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் 9 நாட்களுக்கு கையிருப்பு உள்ளது.

தொடர்ச்சியாக குழாய் வழியாக பெறப்பட்டும் வருவதால், பெட்ரோல், டீசலுக்கு எந்த தடையும் இருக்காது. அச்சப்பட வேண்டாம். மத்திய அரசு அறிவிப்பின்படி, நகர்ப்புற வீடுகளுக்கு 25 நாட்களுக்கு ஒருமுறையும், கிராமங்களில் 45 நாட்களுக்கு ஒருமுறையும் சிலிண்டர் வழங்கப்படும். வணிகப் பயன்பாடு சிலிண்டர்கள் 20 சதவீதம் வரை வழங்கப்படுகின்றன. அதில் மருத்துவமனை, கல்வி நிறுவன விடுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது’’ என்றார்.

உணவகங்கள், தேநீர் கடைகளுக்கு யூனிட் ஒன்றுக்கு மின்கட்டணத்தில் ரூ.2 சலுகை
கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in