

கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலினுடன் ‘செல்ஃபி’ எடுத்து கொண்ட பொதுமக்கள்.
கொடைக்கானல்: கொடைக்கானல் மனோரஞ்சிதம் அணை பகுதியில் நடை பயிற்சி சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு காத்திருந்த பொதுமக்களுடன் கலந்துரையாடினார். முதல்வரின் குடும்பத்தினர் ஏரியில் படகு சவாரி செய்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் கொடைக்கானலில் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காக குடும்பத்துடன் முதல்வர் ஸ்டாலின் வந்துள்ளார்.
நேற்று முன்தினம் காலை நட்சத்திர ஏரி பகுதியில் தனது குடும்பத்தினருடன் முதல்வர் நடைபயிற்சி மேற்கொண்டார். அதன் பிறகு விடுதிக்குச் சென்ற அவர், நாள் முழுவதும் அறையிலேயே தங்கி ஓய்வெடுத்தார்.
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்த முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா மற்றும் குடும்பத்தினர்.
சுற்றுலா பயணிகள் ஆர்வம்
இந்நிலையில் நேற்று காலை கொடைக்கானல் நகராட்சி மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும், வனப்பகுதியையொட்டி உள்ள மனோரஞ்சிதம் அணை பகுதியில் மூலிகை காற்றை சுவாசித்தபடி, ஒரு மணி நேரம் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார்.
இதை அறிந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவரை பார்ப்பதற்காக அணையின் வெளிப் பகுதியில் ஆர்வமுடன் காத்திருந்தனர்.
நடைபயிற்சியை முடித்துவிட்டு வெளியே வந்த முதல்வரை பார்த்ததும் பலரும் ஆர்வமுடன் அவர் அருகே சென்று ‘செல்ஃபி’ எடுத்துக்கொண்டனர். அப்போது, பொதுமக்களுடன் முதல்வர் கலந்துரையாடினார். பின்னர், தங்கும் விடுதிக்கு சென்றார்.
‘செல்ஃபி’ எடுத்த தாய்மார்கள்
இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா மற்றும் குடும்பத்தினர் நட்சத்திர ஏரியில் 2 படகுகளில் சவாரி செய்தபடி, இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தனர்.
படகு சவாரியை முடித்துவிட்டு வெளியே வந்த துர்கா ஸ்டாலினிடம் குழந்தையை கையில் கொடுத்து தாய்மார்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பலர் ஆர்வமுடன் ‘செல்ஃபி’ எடுத்துக் கொண்டனர்.
பின்னர், கொடைக்கானலில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில் துர்கா ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்று அம்மனை தரிசனம் செய்தார்.