“அன்பைச் சொல்லித்தரும் ஆன்மிகத்தை வம்பு செய்யப் பயன்படுத்துகிறார்கள்” - முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

படம்: ர.செல்வமுத்துகுமார்

படம்: ர.செல்வமுத்துகுமார்

Updated on
2 min read

அன்பு செய்யச் சொல்லித்தர வேண்டிய ஆன்மிகத்தை சில கும்பல் வம்பு செய்யப் பயன்படுத்துகிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ளும் சமத்துவ நடைபயண தொடக்க விழா திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் நேற்று நடைபெற்றது. நடைபயணத்தை தொடங்கி வைப்பதற்கு முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வைகோ மேற்கொள்ளும் சமத்துவ நடைபயண நிகழ்ச்சி தான், ஆங்கில புத்தாண்டின் எனது முதல் நிகழ்ச்சி. பொதுவாழ்க்கையில் தமிழகத்தில் தன் காலடி படாத இடங்களே இல்லை என மக்கள் பிரச்சினைகளுக்காக நடைபயணம் மேற்கொண்டவர் வைகோ. இளைஞர்களுக்கு நல் வழிகாட்டவும், அவர்களின் நலனுக்காகவும், எதிர்கால நன்மை, வளர்ச்சிக்காகவும் செயலாற்றும் இயக்கம் தான் திராவிட இயக்கம்.

தள்ளாத 95 வயதிலும் தமிழர்களுக்காக உழைத்து இறுதி மூச்சு வரை பாடுபட்டவர் பெரியார். அவர் வழியில் வந்த கருணாநிதி 80 ஆண்டுகால பொதுவாழ்வுக்கு சொந்தக்காரர். 16 வயதில் மாணவநேசன் பத்திரிகை ஆரம்பித்து, இளைஞர்களிடம் உறவாடிய அவர், 89 வயதிலும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் அரசியல் செய்தார். அப்படிப்பட்ட திராவிட பல்கலைக்கழகத்தில் படித்தவர் வைகோ. இந்த ஸ்டாலினும் அதே பல்கலைக்கழக மாணவன் தான்.

மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு நீதிகேட்டு நெடும் பயணம் தொடங்கியபோது கருணாநிதியுடன் நடந்தவர் வைகோ. இன்று சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறார். இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப் பொருட்களை நிச்சயம் ஒழிக்க வேண்டும் என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. போதையின் பாதையில் செல்லும் இளைஞர்களை தடுத்து, அவர்களின் நலன் காக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மத்திய அமைச்சர்கள் மற்றும் பதவியில் இருப்பவர்கள் வெறுப்பு கருத்துகளை பேசி, இருபிரிவினருக்கு இடையே மோதலை தூண்டும் விதமாக செயல்படுகின்றனர். தனிப்பட்ட கொள்கைகளுக்கு இந்திய நாட்டின் ஒருமைப்பாடு, அமைதியை சீர்குலைக்கும் நாசகார வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் அச்சத்தில் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஊரே ஒன்றுகூடி மகிழ்ச்சியாக இருந்த காலம் போய், ஒருத்தருக்கு ஒருத்தர் எதிரியாக கட்டமைக்கும் வேலையை பிளவுவாத சக்திகள் இன்று செய்கின்றன. அன்பு செய்யச் சொல்லித்தர வேண்டிய ஆன்மிகத்தை சில கும்பல் வம்பு செய்ய பயன்படுத்துகிறது.

இந்த நிலையில் தான், போதைப் பொருள் ஒழிப்பு, சாதி, மத மோதல் தடுப்பு உள்ளிட்ட நாட்டுக்குத் தேவையான கருத்துகளை வலியுறுத்தி வைகோ இந்த சமத்துவ நடைபயணத்தை தொடங்கி உள்ளார். வைகோவின் நடைபயணம் நிச்சயம் புதிய வரலாற்றை படைக்கும். காந்தி, மாவோ பயணங்கள் வரலாற்றில் புரட்சி ஏற்படுத்தியதுபோல, வைகோவின் நடைபயணமும் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த பயணத்தின் தாக்கத்தை சமூக வலைதளத்தில் கொண்டு போய் சேர்த்து, இளைஞர்களின் பேசுபொருளாக்க வேண்டியது அனைவரது கடமை. நடைபயணத்தை வைகோ கவனமாக மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற கடுமையான பயணங்களை இனி அவர் மேற்கொள்ளக்கூடாது. தனது உடல்நலனை பாதுகாக்க வேண்டும் என அவரிடம் அன்பான வேண்டுகோளை வைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

<div class="paragraphs"><p>படம்: ர.செல்வமுத்துகுமார்</p></div>
“பாஜக கூட்டணிக்கு விஜய் வந்தால் நல்லது” - தமிழிசை விருப்பம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in