

பலமான அதிமுக - பாஜக கூட்டணிக்கு விஜய் வந்தால் நல்லது என, தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: போதையை ஒழிப்பதற்காக பாதயாத்திரையை வைகோ தொடங்கி இருக்கிறார். அதனை முதல்வர் தொடங்கி வைக்கிறார். போதையை உற்பத்தி செய்வது, விற்பது, ஆதரிப்பது எல்லாம் அவர்கள்தான். எனவே, அறிவாலயத்தை நோக்கித் தான் அவர்கள் பாதயாத்திரை செல்ல வேண்டும்.
திமுக கூட்டணிக்குள் குழப்பங்கள் ஆரம்பித்து விட்டன. காங்கிரஸ் கட்சியின் நிலை குறித்து ஜோதிமணி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் கடன் சுமைஅதிகரித்து விட்டதாக காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார். ஆனால், கடனை வைத்து ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை மதிப்பிட முடியாது என ப.சிதம்பரம் கூறியுள்ளார். அந்த அளவுக்கு தமிழக காங்கிரஸார் அறிவாலயத்தின் அடிமைகளாக மாறிவிட்டனர்.
அதிமுக, பாஜக ஆகிய 2 கட்சிகளுமே அசுர சக்திகள். நாங்கள் அனுபவத்தில் பலமாக இருக்கிறோம். விஜய் பலமாக இருப்பதாக அனுமானத்தில் கூறிக் கொண்டிருக்கிறீர்கள். அனுபவத்தில் பலமாக இருப்பவர்களுடன், அனுமானத்தில் பலமாக இருப்பவர்கள் வந்தால் நல்லது. வரவில்லை என்றால் எங்களுக்கு எதுவும் பிரச்சினை கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.