

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவு நிறுவப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். உடன் பேரவைத் தலைவர் மு.அப்பாவு உள்ளிட்டோர். | படங்கள்: மு.லெட்சுமி அருண். |
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா அலங்கார வளைவை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மதியம் கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். அங்கு அரசு விருந்தினர் மாளிகை அருகே ரூ.1.45 கோடியில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா அலங்கார வளைவை திறந்து வைத்தார்.
பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி. எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், தாரகை கத்பர்ட், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப்பன், மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ்ராஜன், ஆட்சியர் அழகுமீனா, முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின், நாகர்கோவில் மேயர் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, கன்னியாகுமரி அருகே பெருமாள்புரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.7 கோடியே 85 லட்சம் செலவில் கட்டப்பட்ட 90 வீடுகளை முதல்வர் பார்வையிட்டார். பின்னர், அந்த வீடுகளை முகாமில் வசிக்கும் மக்களைக் கொண்டே திறந்துவைத்தார்.
மாலையில் கன்னியாகுமரியில் இருந்து புத்தளம் கல்லடிவிளை வந்த முதல்வர் அங்கு, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் சொந்த செலவில் அமைத்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழுஉருவச் சிலை, ஸ்டாலின் படைப்பகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
பின்னர் கன்னியாகுமரி, புத்தளம் ஆகிய இடங்களில் காரை விட்டு இறங்கி சற்று தூரம் நடந்து சென்று, பொதுமக்களை சந்தித்தார். அவர்களிடம் உரை யாடியதுடன் அவர்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் வாங்கிக் கொண்டார்.
நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு சர்.சி.பி.ராமசாமி அய்யர் நினைவு பூங்காவில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தியாகி பொன்னப்பநாடார் சிலையை இரவு 7 மணியளவில் திறந்துவைத்தார்.
இன்று காலை 9.30 மணியளவில் நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், ஐடி பார்க் உட்பட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தும் பேசுகிறார். காலை 11 மணியளவில் தூத்துக்குடி செல்லும் அவர், அங்கிருந்து மதியம் விமானம் மூலம் சென்னைக்கு புறப்படுகிறார்.
இலங்கை தமிழருக்கு குடியுரிமை:
பெருமாள்புரத்தில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 90 வீடுகளை திறந்து வைத்த பின்னர், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம். நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தர போராடுவோம்.
இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள், அவர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில 3 கல்வியாண்டுகளில் 5,771 மாணவர்களுக்கு ரூ.11.07 கோடி கல்வி உதவித்தொகை மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்கு நிதி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கி, அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது.
நீண்டகாலமாக இந்தியாவில் வசிப்போருக்கு நியாயமாகக்கிடைக்க வேண்டிய குடியுரிமையை இந்திய அரசு விரைந்து வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதுவரை, நமது தமிழ்ச் சொந்தங்களுக்கான குரல் தொடர்ந்து ஒலிக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.