

நெல்லையில் ‘பொருநை’ அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, துலுக்கர்பட்டி ஆகிய தொல்லியல் தளங்களில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் திருநெல்வேலியில் அமைக்கப்பட்டுள்ள ‘பொருநை’ அருங்காட்சி யகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
பொருநை அருங்காட்சியகம் அமைக்க 110 விதியின்கீழ் பேரவையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் 13 ஏக்கர் பரப்பளவில் ரூ.56.36 கோடி செலவில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்துப் பார்வையிட்டார். பின்னர், முதல்வர் வெளியிட்ட காணொலி உரையில் அவர் பேசியதாவது: மதுரை கீழடியைத் தொடர்ந்து பொருநை அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
நுண்-கற்கருவிக் காலம் தொடங்கி, இரும்புக் காலம், தொடக்க வரலாற்றுக் காலம்- என்று தொடர்ச்சியாக வரலாற்றுத் தடயங்கள் பொருநை ஆற்றங்கரைப் பகுதிகளில் ஏராளமாக கிடைக்கின்றன.
கொற்கை, ஆதிச்சநல்லூர், சிவகளை போன்ற இடங்களில், இரும்புக்காலத்தைச் சார்ந்த புதைப்பிடப் பகுதிகளும், மக்கள் வாழ்விடப் பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, இரும்பை உருக்கி கருவிகளை செய்யும் தொழில்நுட்பம் தமிழ்நாட்டில்தான் சிறப்பாக இருந்திருக்கிறது. இதுவரை கிடைத்த இரும்பு பொருட்களிலேயே, காலத்தால் முந்தைய இரும்பு சிவகளையில்தான் கிடைத்தது.
டிஜிட்டல் முறையில் உருவகப்படுத்தப்பட்ட இரும்பு உருக்கு செயல்முறை, 5-டி முறையில் தமிழ் நிலங்களின் வழியாக உணர்வுப் பயணம், ஒளிப்படக் காட்சி, மெய்நிகர் படகு அனுபவ உருவகம், ஆற்றுப் பள்ளத்தாக்கு நாகரிகங்களின் தொடுதிரைக் காட்சி, கருவிகளை உருவாக்கும் இன்டராக்டிவ் வால், டிஜிட்டல் ஃபீட்பேக் மையம், பொருநையின் குரல் பயணம் போன்ற ஏராளமான நவீன தொழில்நுட்ப அனுபவங்களை இங்கு பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில், பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு முன்னிலை வகித்தனர். தொல்லியல் துறை ஆணையர் மற்றும் நிதித்துறை முதன்மை செயலர் த.உதயச்சந்திரன், சுற்றுலாத் துறைச் செயலர் க.மணிவாசன், ஆட்சியர் ஆர்.சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
420 ஆசிரியர்களுக்கு நியமன ஆணை: நெல்லை டக்கரம்மாள்புரத்தில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெற்ற மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் தேர்வுக் குழுவில், அந்தந்த நிறுவனத்தினரே ஆசிரியர்களை நியமிக்கும் வகையில் விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் உள்ள புனித யாக்கோபு ஆலயம் ரூ.1.42 கோடியில் புனரமைக்கப்படுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளோம் அதனால், 1,439 ஆசிரியர்கள் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். புதிய விதிமுறைகள் அமல்படுத்துவதற்கு முன்பு நியமிக்கப்பட்ட 420 ஆசிரியர்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு நியமன ஆணைகள் வழங்கப்படும்.
பாஜக அரசு சிறுபான்மையின மக்களுக்கு எதிராகவே செயல்படுகிறது. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக திமுக போராடியது. ஆனால், அதிமுக ஆதரவாக செயல்பட்டு வாக்களித்தது. பாஜகவுக்கு மதச்சார்பின்மை என்பது வேப்பங்காயாக கசக்கிறது. ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மட்டுமல்ல, அந்த திட்டத்தையே மத்திய அரசு தகர்த்து விட்டது. வாக்காளர் பட்டியலில் உங்களது வாக்குகள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பட்டியலில் மீண்டும் பெயர் சேர்க்க திமுக நிர்வாகிகள் உதவுவார்கள். திமுக எப்போதும் சிறுபான்மையான மக்களுக்கு துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.