வீரதீர செயலுக்கான ‘அண்ணா’ பதக்கங்கள், விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

குடியரசு தின விழாவில் அண்ணா பதக்கங்கள், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது, டாக்டர் நாராயணசாமி நாயுடு வேளாண்மை விருது, சிறந்த காவல் நிலையத்துக்கான முதல்வரின் கோப்பைகளைப் பெற்றவர்கள், முதல்வர் ஸ்டாலினுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

குடியரசு தின விழாவில் அண்ணா பதக்கங்கள், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது, டாக்டர் நாராயணசாமி நாயுடு வேளாண்மை விருது, சிறந்த காவல் நிலையத்துக்கான முதல்வரின் கோப்பைகளைப் பெற்றவர்கள், முதல்வர் ஸ்டாலினுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Updated on
2 min read

சென்னை: வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், விருதுகளை சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

‘அண்ணா’ பதக்கங்கள் கடந்த 2025 மே 25-ம் தேதி கேரளாவில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளின் கார் ஒன்று குன்னூரில் ஆற்றில் சிக்கிக் கொண்டது. 3 பயணிகள் உயிருக்குப் போராடினர். நீலகிரி மாவட்டம் குன்னூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சங்கர், சுரேஷ், ரமேஷ்குமார் ஆகிய மூவரும் இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு, சுழலும் நீரில் துணிச்சலுடன் குதித்தனர். ஆற்றில் நீந்திச் சென்று, காரில் சிக்கிய 3 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

கன்னியாகுமரியை சேர்ந்தவர் பீட்டர் ஜான்சன். கடந்த ஜூன் 1-ம் தேதி தாமிரபரணி ஆற்றில் விழுந்த 2 சிறுவர்களை மீட்பதற்காக பீட்டர் ஜான்சன் ஆற்றில் குதித்தார். நீந்திச் சென்று, 2 சிறுவர்களையும் மீட்டு கரையில் சேர்த்தார். ஆனால், வலுவான ஆற்றோட்டத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார். வீரதீர செயலுக்கான ‘அண்ணா’ பதக்கங்கள் தீயணைப்பு வீரர்கள் சங்கர், சுரேஷ், ரமேஷ் குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. மறைந்த பீட்டர் ஜான்சனுக்கான பதக்கத்தை அவரது மனைவி ஜெஸ்ஸி பெற்றுக் கொண்டார்.

கோட்டை அமீர் விருது: திருப்பூரை சேர்ந்த மு.கலிமுல்லா, ஆர்எம்ஜே. ரோஸ் கார்டன் முஸ்லிம் ஜமாத் மசூதி சபா கமிட்டி தலைவராக உள்ளார். காங்கேயம் கணபதிபாளையம் கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான 3 சென்ட் நிலத்தை விநாயகர் கோயில் கட்ட தானமாக வழங்கியுள்ளார். கோயில் கட்ட ரூ.3 லட்சம் நன்கொடையும் வழங்கியுள்ளார். மத நல்லிணக்கத்துக்கான ‘கோட்டை அமீர்’விருது இவருக்கு வழங்கப்பட்டது.

வேளாண் துறை விருது: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரை சேர்ந்த விவசாயி க.வீரமணி, நெல் ஆராய்ச்சி இயக்குநரகத்தால் மேம்படுத்தப்பட்ட பிபிடி(BPT) 5204 எனும் அதிக விளைச்சல் தரும் சன்ன நெல்ரகத்தை தனது வயலில் பயிரிட்டு,திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை மிக நுணுக்கமாக பின்பற்றி ஹெக்டேருக்கு 14,925 கிலோ மகசூல் பெற்றார். அதிக உற்பத்தி திறன் பெறும்விவசாயிக்கான சி.நாராயணசாமி நாயுடு சிறப்பு விருது இவருக்கு வழங்கப்பட்டது.

காந்தியடிகள் காவல் பதக்கம்: கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்படுகிறது. அந்த வகையில், விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் ப.நடராஜன், விழுப்புரம் ஆரோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மா.சத்யானந்தன், கள்ளக்குறிச்சி சின்னசேலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சு.மணிகண்டன், கடலூர் புத்தூர் காவல் நிலைய உதவிஆய்வாளர் க.நடராஜன், சேலம் மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் வா.பெ.கண்ணன் ஆகிய 5 பேருக்கும் காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

போலிமதுபான ஆலை, கள்ளச்சாராயம்,சாராய ஊறல்கள், எரிசாராயம்,போலி மதுபாட்டில்கள் ஆகியவற்றை அதிக அளவில் கண்டறிந்தது, அதிக வழக்குகள் பதிவு செய்தது, தொடர்பு உடைய வாகனங்களை கைப்பற்றியது, பல குற்றவாளிகளை கைது செய்ததற்காக இவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த காவல் நிலையம்: சிறந்த காவல் நிலையங்களுக்கான முதல்வரின் விருதை பொருத்தவரை, மதுரை மாநகரம், திருப்பூர் மாநகரம், கோவை மாவட்டம் ஆகியவை முதல் 3 இடங்களைப் பெற்றன. விருதாளர்கள் அனைவரும் முதல்வர் ஸ்டாலினுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

<div class="paragraphs"><p>குடியரசு தின விழாவில் அண்ணா பதக்கங்கள், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது, டாக்டர் நாராயணசாமி நாயுடு வேளாண்மை விருது, சிறந்த காவல் நிலையத்துக்கான முதல்வரின் கோப்பைகளைப் பெற்றவர்கள், முதல்வர் ஸ்டாலினுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.</p></div>
77-வது குடியரசு தின விழா: சென்னையில் கொடியேற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in