

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலர் நா.முருகானந்தம் உள்ளிட்டோர்.
சென்னை: குடியரசு தினத்தையொட்டி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்து, முப்படைகள், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நாட்டின் 77-வது குடியரசு தினம் நேற்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் தலைநகரமான சென்னையில், மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்றது. காலை 7.52 மணிக்கு சென்னை போக்குவரத்து காவலர்களின் புல்லட் அணிவகுப்புடன் முதல்வர் ஸ்டாலினும், பின்னர், விமானப்படை வீரர்களின் புல்லட் அணிவகுப்புடன் ஆளுநர் ஆர்.என்.ரவியும் வந்தனர். சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற பொதுமக்களுக்கு அவர்கள் குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.
விழா நடைபெறும் இடத்துக்கு முதலில் வந்த முதல்வரை தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வரவேற்றார். பின்னர், ஆளுநரை முதல்வர் வரவேற்றார். ஆளுநருக்கு முப்படை அதிகாரிகள், கடலோரக் காவல்படை மற்றும் தமிழக காவல் அதிகாரிகளை தலைமைச் செயலர் அறிமுகம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து, காலை 8 மணிக்கு தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்தார்.
பின்னர், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழக அரசு மாதிரி பள்ளிகள், அம்பத்தூர் காமராஜர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மயிலாப்பூர் லேடி சிவசாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராணி மேரி கல்லூரி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, சோகா இகேதா கல்லூரி மாணவிகளின் கிராமிய நடனம் நடைபெற்றது. பாரதிதாசனின் ‘சங்கே முழங்கு’ பாடலுக்கு மாணவிகள் நடனமாடினர்.
இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில், ராஜஸ்தானின் சாரி நடனம்,கர்நாடகாவின் லம்பானி நடனம், அருணாச்சல பிரதேசத்தின் ஜிஜியா நடனம் ஆகியவற்றை அந்த மாநிலக் கலைஞர்கள் நிகழ்த்தினர். செய்தித் துறை சார்பில், மதுரையில் உள்ள தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையத்தினரின் பெரியமேளம், தேவராட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகிய கலைகள் நிகழ்த்தப்பட்டன.
இதையடுத்து, செய்தித் துறையின் 2 வாகனங்கள் மற்றும் காவல், பள்ளிக் கல்வி, சுகாதாரம், கைத்தறி, தகவல் தொழில்நுட்பம் உட்பட 22 அரசுத் துறைகளின் அலங்கார வாகன அணிவகுப்புகள் நடைபெற்றன. இவற்றை நேரிலும், டிஜிட்டல் திரைகள் மூலமாகவும் மக்கள்கண்டு களித்தனர்.
ஆளுநரின் மனைவி லட்சுமி ரவி, பேரவைத் தலைவர் அப்பாவு, துணைத் தலைவர் பிச்சாண்டி, அமைச்சர்கள், டிஜிபி வெங்கடராமன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அரசு அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் விழாவில் பங்கேற்றனர்.
இதேபோல, தமிழகம் முழுவதும் குடியரசு தின விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மாவட்டத் தலைநகரங்களில் ஆட்சியர்கள் கொடி ஏற்றினர். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத் துறை, தனியார் அலுவலகங்கள், வங்கிகள், பள்ளி, கல்லூரிகளில் தேசியக் கொடி ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
முப்படையினர், போலீஸார் அணிவகுப்பு மரியாதை: விங் கமாண்டர் பரம்ஜீத் சிங் அரோரா தலைமையிலான அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக் கொண்டார். முப்படைகள், கடலோரக் காவல் படை, சிஐஎஸ்எஃப், முன்னாள் ராணுவத்தினர் உட்பட பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு கள் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து, கமாண்டர் எம்.செல்வமணி தலைமையில் காவல் துறையின் பல்வேறு பிரிவினர், வனத்துறை உள்ளிட்ட பிரிவுகளின் அணிவகுப்புகள், கூட்டுக் குழல் முரசு இசை அணிவகுப்பு, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், சாரண, சாரணியர் படையினர், சென்னை மாதவரம் ஜெஎச்ஏ அகர்சன் கல்லூரி, தண்டையார்பேட்டை டிஎஸ்டி ராஜா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ராயபுரம் ஜி.கே.ஜெயின் மேல்நிலைப் பள்ளி, ஆதம்பாக்கம் டிஏவி பள்ளியின் கூட்டுக் குழல் முரசு இசைப் பிரிவினர் அணிவகுத்து வந்தனர்.