

முதல்வர் ஸ்டாலின்
சென்னை: ‘உலகம் உங்கள் கையில்’ என்ற கருப்பொருளின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் (லேப்டாப்) வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார். முதல்கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.
புதுமைப் பெண், தமிழ்ப்புதல் வன் மற்றும் கல்வி உதவித்தொகை திட்டங்களின் தொடர்ச்சியாக, தமிழகத்தில் கல்லூரி மாணவர்களின் டிஜிட்டல் முன்னேற்றம் மற்றும் திறன் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், ‘உலகம் உங்கள் கையில்’ என்ற கருப்பொருளின் கீழ் புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.5) தொடங்கி வைக்கிறார்.
அதன்படி, அரசு பொறியியல்,கலை, அறிவியல், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் என அனைத்துத் துறை சார்ந்த மாணவர்களும் பயனடையும் வகையில் இத்திட்டம் மாநிலம் முழுவதும் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று (ஜன.5) நடைபெறும் விழாவில் 10 லட்சம்மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
நவீன வசதிகள்: டெல், ஏசெர், ஹெச்.பி போன்ற உலகத்தரமான முன்னணி நிறுவனங்களின் தயாரிப்பில் இன்டெல் ஐ3 அல்லது ஏஎம்டி ரைசன் 3 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி எஸ்எஸ்டி ஹார்டு டிஸ்க், விண்டோஸ் 11, பாஸ் லினக்ஸ் இயங்குதளங்கள், எம்.எஸ் ஆஃபீஸ் 365 போன்ற நவீன வசதிகளுடன் கூடிய மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இத்துடன் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான ‘பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ’வுக்கான 6 மாதகால சந்தாவும் கட்டணமின்றி வழங்கப்படுகிறது. இந்த மடிக்கணினிகள் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், மென்பொருள் உருவாக்கம்,டிஜிட்டல் சந்தைப்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு, தகவல்
தொழில்நுட்பத் துறை, கிராஃபிக் டிசைன், டேட்டா என்ட்ரி, கோடிங்,வெப் டிசைனிங் மற்றும் ஃபிரீலான்சிங் (சுயாதீன வேலைவாய்ப்பு) போன்ற நவீனமயமான துறைகளில் மாணவர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறவும் உதவும். இத்திட்டம் தமிழகத்தின் டிஜிட்டல் கனவை நனவாக்கும் ஒரு மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.