
அண்ணா அறிவாலயத்தில் நேர்காணலின் போது முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் வி.வெங்கடேஸ்வரன்.
படம்: எஸ்.சத்தியசீலன்
தலைவர்களின் பிரச்சாரம், பதில் தாக்குதல்களால் தமிழக தேர்தல் களம் கனன்று கொண்டிருக்கிறது. ஐந்து ஆண்டு காலத் திட்டங்களை மேடைக்கு மேடை பட்டியலிட்டபடி, மிகுந்த நம்பிக்கையுடன் இடைவிடாது பயணித்து வருகிறார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். முந்தைய தினம், திருமங்கலம், விருதுநகரில் தனது பிரச்சாரத்தை முடித்திருந்தார். சென்னையில் இருந்து நேற்று புதுச்சேரி பிரச்சாரத்துக்காக புறப்படும் முன்னர், நமக்கு நேரம் ஒதுக்கித் தந்திருந்தார்.
அண்ணா அறிவாலயத்தில் அவரது அறையில் நாம் நுழைந்ததுமே, ‘வாங்க.. வாங்க.. வணக்கம்’ என்றபடி இன்முகத்துடன் கைகுலுக்கி வரவேற்றார்.
இருக்கையில் அமர்ந்ததுமே, ‘கள நிலவரம் குறித்து உங்கள் பத்திரிகையில் எதுவும் சர்வே எடுத்தீர்களா? என்றவாறே, நேர்காணலை மிகவும் சகஜமாக அவரே தொடங்கினார்.
‘சர்வே எதுவும் எடுக்கவில்லை... ஆனால், உங்கள் பிரச்சாரத்தையும் துணை முதல்வர் பிரச்சாரத்தையும் எங்கள் செய்தியாளர்கள் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள். பிரச்சார இடங்களை நீங்கள் கடந்து சென்ற பிறகு, கட்சி சாராத பொதுமக்களிடம் பேசுகிறார்கள். அவர்கள் திமுக அரசின் திட்டங்கள் மூலம் பயன்பெற்ற பயனாளிகளாக இருக்கிறார்கள். வேறு கட்சிகளில் இருந்தாலும் தற்போது திமுக பக்கம் ஈர்க்கப்பட்டிருப்பதாக சொல்லியுள்ளார்கள்.’
நமது பதிலால் மேலும் உற்சாகமானார் முதல்வர்.
அந்த திருப்தி எனக்கும் இருக்கிறது. மேடையில் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் என்று சொல்லி பட்டியலிடுகிறேன். இல்லத்தரசி திட்டம் என்று நான் சொல்லத் தொடங்கியதும், எட்டாயிரம், எட்டாயிரம் என்று பெண்கள் குரல் கொடுக்கிறார்கள்.
அவர்களுக்கு தேவையான பொருளை, தேவையான பிராண்டில் வாங்க வசதியாக இருக்கும் மகத்தான திட்டம் என்பதால் வரவேற்கிறார்கள். எனது 5 ஆண்டு கால ஆட்சிக்கான அங்கீகாரமாக அந்த மேடையில் பெருமிதம் கொள்கிறேன். அதையொட்டியே அடுத்த கேள்வியை நகர்த்தினோம்.
எட்டாயிரம் ரூபாய்க்கான கூப்பன் திட்டத்தில் இன்னும் மக்களுக்கு தெளிவு கிடைக்கவில்லை. அதை நடைமுறைப்படுத்துவது சாத்தியம் இல்லை என்று எதிர்க்கட்சியினர் ஒரு கருத்தைச் சொல்கிறார்களே?
அந்த வாக்குறுதி பெரிய அளவில் ’ஹிட்’ ஆகிவிட்டது. அதனாலேயே சிலர் அவதூறு பரப்புகிறார்கள் என்று கருதுகிறேன். இலவச டிவி தருவோம் என்று கலைஞர் வாக்குறுதி கொடுத்தபோதும்கூட ஏகப்பட்ட ஐயங்களை எழுப்பினார்கள். நடைமுறைப்படுத்திக் காட்டியது திமுக அரசு. அதேபோல், மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ரூ.8,000க்கான கூப்பன் திட்டத்தையும் வெற்றிகரமாக அமல்படுத்தி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவோம்.
நாம் அடுத்தடுத்து கேள்விகளைப் பட்டியலிட்டோம். சில கேள்விகளுக்கு மட்டும், ‘அதெல்லாம் வேணுமா..’ என்று சிரித்தபடி கடந்துவிட்டார். பெரும்பாலான கேள்விகளுக்கு பதில்கள் கிடைத்தன. அவற்றிலிருந்து-
ஐந்து ஆண்டுகால 'திராவிட மாடல்' ஆட்சியைத் திருப்திகரமாக நிறைவு செய்திருப்பதாகக் கருதுகிறீர்களா? எடுத்த எடுப்பிலேயே '200 இடங்களில் வெல்வோம்' என்று பிரச்சாரத்தில் சொல்லும் அளவுக்கு நம்பிக்கை எப்படி வந்தது?
எங்களின் ஒவ்வொரு திட்டமும் கடைக்கோடி மனிதரையும் சென்றடைந்துள்ளது. ஒரு கோடியே 31 லட்சம் மகளிர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை பெறுகிறார்கள். எங்கள் அண்ணன் கொடுக்கும் மாதாந்திர சீர் என்று பெண்கள் பெருமையுடன் சொல்கிறார்கள். தேர்தலை முன்னிட்டு இத்திட்டத்தை முடக்க பாஜக நினைத்தது.
இதையடுத்து 3 மாதத்துக்கு சேர்த்து ரூ.3 ஆயிரமும், கோடைக்கால நிதியாக ரூ.2 ஆயிரமும் என மொத்தமாக ரூ.5 ஆயிரம் வழங்கி இருக்கிறோம். பொங்கல் திருநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாட ரூ.3 ஆயிரத்தை 2.23 கோடி குடும்பங்களுக்கு வழங்கினோம். ஆட்சிப் பொறுப்பேற்றதும் இட்ட முதல் கையெழுத்து மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பயணமாகும்.
19.34 லட்சம் பள்ளிக் குழந்தைகள் தினமும் வயிறார காலை உணவு உண்கிறார்கள். 48 லட்சம் இளைஞர்கள் ‘நான் முதல்வன்’ திட்டத்தால் பயிற்சி பெற்றுள்ளனர். 10 லட்சம் மாணவ, மாணவிகள் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களால் மாதந்தோறும் ரூ.1000 பெறுகிறார்கள். 4.57 லட்சம் மனுக்களுக்கு ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் தீர்வு கண்டோம். 18.30 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களின் 22 ஆண்டுகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை சிறிய மாற்றங்களுடன் ‘டேப்ஸ்’ ஆக நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பாகப் பணிபுரிய தோழி விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. இப்படி, எண்ணற்ற திட்டங்கள் மூலம் மக்களைச் சென்றடைந்திருப்பதால், 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று நம்பிக்கையுடன் சொல்கிறேன்.
தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு என கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் செயல்பாடுகள் திமுகவுக்குச் சங்கடங்களை ஏற்படுத்திவிட்டதாகச் சொல்கிறார்கள். புதுச்சேரியிலும் பல உரசல்கள். பரப்புரைக் களத்தை இந்த அதிருப்திகள் பாதிக்கும் சூழல் உள்ளதா?
இல்லவே இல்லை. எங்கள் கூட்டணி, எண்ணிக்கையால் ஆனது அல்ல. எண்ணங்களால் ஆனது என்று சொல்லி இருக்கிறேன். பல புதிய கட்சிகள் சேர்ந்துள்ளதால் அனைவருக்கும் பங்கிட்டுத் தர காலதாமதம் ஏற்பட்டிருக்கலாம். மற்றபடி இதில் யாருக்கும் எந்தச் சங்கடமும் ஏற்படவில்லை. இது பரப்புரைக் களத்தை பாதிக்காது. இருதரப்பும் கையெழுத்து போட்டதும், தேர்தல் வேலைக்குள் போய்விட்டோமே தவிர, இதைப் பற்றியெல்லாம் யாரும் சிந்திப்பது இல்லை.
கூட்டணி கட்சிகளை 'உதயசூரியன்' சின்னத்தில் நிற்கச் சொல்லி அழுத்தம் கொடுப்பது ஜனநாயகம் அல்ல என்று கூட்டணியில் உள்ள தலைவர்கள் வருத்தப்படுகிறார்களே?
அப்படி யாரும் சொன்னதாகத் தெரியவில்லை. பொதுவாகத் தேர்தலில் சின்னம் வலிமையான இடத்தைப் பெறுகிறது. செல்வாக்கான, வலிமையான சின்னமான உதயசூரியனை பலரும் கேட்டு வாங்கினார்கள் என்பதே உண்மை.
மாற்றுக் கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு திமுகவில் உடனுக்குடன் வாய்ப்புகள் வழங்கப்படுவதால் பரம்பரையாக திமுகவில் பயணிப்பவர்கள் சோர்ந்து போகிறார்கள் என்ற கருத்தை கவனிக்கிறீர்களா?
அப்படி இல்லை. 234 தொகுதிகளில் 165 தொகுதிகளில்தான் திமுக போட்டியிட வாய்ப்பு கிடைக்கிறது. அதற்குள்தான் வாய்ப்புகளை வழங்க முடியும். வந்தவர்கள், இருப்பவர்கள் என்று பார்ப்பது இல்லை. தகுதியுடையவர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறோம்.
இண்டியா கூட்டணிக்கு ஸ்டாலின் தலைமை ஏற்க வேண்டுமென மணிசங்கர் அய்யர் சொன்னதை எப்படி எடுத்துக் கொண்டீர்கள்? அப்படியொரு கோரிக்கை வலுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
என் உயரம் எனக்குத் தெரியும் என்று எங்கள் தலைவர் கலைஞர் சொன்னதுதான் எனது பதில். மற்றபடி, இண்டியா கூட்டணி வலிமை பெற அனைத்தும் செய்வேன்.
மக்கள் இலவசங்களை விரும்பவில்லை, வளர்ச்சியைத்தான் விரும்புகிறார்கள் என்று நீங்களே நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தீர்கள், ஆனால், தற்போது மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் என இலவசங்கள் வாரி வழங்கப்படுவதாக விமர்சிக்கப்படுகிறதே?
மகளிர் உரிமைத் தொகை என்பது இலவசமல்ல. உரிமைத் தொகை என்றுதான் சொல்லி இருக்கிறோம். அது பெண்களுக்கு தன்னம்பிக்கையையும், பொருளாதாரச் சுதந்திரத்தையும் அளிக்கிறது. விடியல் பயணம் திட்டம், பெண்களின் சமூகப் பங்களிப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.
இரண்டுமே பெண் அதிகாரம், மகளிர் விடுதலை ஆகியவற்றுடன் தொடர்புடைய திட்டங்கள். எனவே, இலவசம் என்று சொல்ல முடியாது. பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்லும் மாநிலமாக தமிழகம் உயர, விடியல் பயணம் காரணமாக அமைந்துள்ளது.
கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவருவதென்பது மிக நீண்ட போராட்டமாகும். அதை பல்வேறு மாநில அரசுகள், தேசிய கட்சிகளுடன் கலந்தாலோசித்து நாடாளுமன்றத்தின் மூலமாக செயல்படுத்திக் காட்ட முனைவோம்.
தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வருவதாக அரசு கூறுகிறது. ஆனால், படித்த இளைஞர்களிடம் வேலையில்லாத் திண்டாட்டம் முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. இதைச் சரிசெய்வதற்கு நீங்கள் வைத்துள்ள திட்டம் என்ன?
அதிக முதலீடுகளை கொண்டு வருவதும், புதுப்புது நிறுவனங்களை உருவாக்குவதும் ஒரு நிறுவனம் சார்ந்த வளர்ச்சி மட்டுமல்ல. அதன்மூலமாக அதிகப்படியான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அதற்காகத்தான் தொழில் முதலீடுகளை அதிகமாக ஈர்த்து வருகிறோம். ‘நான் முதல்வன்' திட்டமானது அனைத்து வகையிலும் மாணவர்களைத் தகுதியுள்ளவர்களாக மாற்றி வருகிறது. தமிழகம் முழுவதும் 18 முதல் 35 வயது வரையுள்ள, படித்த, வேலையில்லாத இளைஞர்கள், பள்ளி அல்லது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் ‘வெற்றி நிச்சயம்’ பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, பயிற்சித் தொகையை அரசே முழுவதும் ஏற்கிறது. தொலைதூர மாவட்டங்களில் இருந்து பயிற்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு உணவுடன் கூடிய இருப்பிட வசதியும் வழங்கப்படும். 500-க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்களின் மூலம் 38 தொழிற்பிரிவுகளில் 165 பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்படும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் தரப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மது, கஞ்சா, போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை முதல்வராகவும், துறை அமைச்சராகவும் தேர்தல் களத்தில் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறீர்கள்?
புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் இவை அனைத்தும் உண்மைக்கு மாறான தகவல்கள். தமிழக அரசு மீது களங்கம் ஏற்படுத்த இத்தகைய அவதூறுகளைத் தொடர்ந்து பரப்புகிறார்கள். கஞ்சா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கிய அதிமுக அமைச்சர்கள் மீது சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.
போதைப் பொருள் நடமாட்டம் அதிகம் இருப்பது பிரதமர் மோடியின் குஜராத் மாநிலத்தில்தான் என்பதற்கு புள்ளிவிவரங்கள் அதிகம் உள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில்தான் அதிகம். எனவே, இதை எல்லாம் அங்கே போய் பேசச் சொல்லுங்கள்.
நிதிப் பகிர்வு போன்ற விவகாரங்களில் மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கு நிலவுவதால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கிறதா? மத்திய அரசுடன் இணக்கமாகச் சென்றால் தமிழகம் வளர்ச்சியடையும் என்கிறாரே பாஜகவின் தமிழிசை?
பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்தும் வளர்ந்துவிட்டதா? இல்லையே. அனைத்து சமூகக் குறியீடுகளிலும் தமிழகம்தான் வளர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் 11.19 சதவீதம் என்ற உயரிய பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான சாதனையாகும். பாஜக தயவு இல்லாமல் மட்டுமல்ல, இடையூறாக இருந்தாலும் அதையும் மீறி தமிழகம் வளரும்.
போர்ச்சூழலில் மக்கள் சந்திக்கும் சிரமங்களை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறுவதாகக் கருதுகிறீர்களா? காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, சிறு வியாபாரிகள் முடங்கியது போன்றவை இந்தத் தேர்தலில் உங்களுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறதா?
இதைப் பற்றியெல்லாம் மத்திய பாஜக அரசுக்கு கவலை இல்லை. கரோனா காலத்தில் மக்களைக் காப்பாற்ற எதுவும் செய்யாமல் விளக்கு ஏற்றுங்கள், மணி அடியுங்கள், கை கழுவுங்கள் என்று சொல்லி கை கழுவியவர்தான் பிரதமர் மோடி. 'கரோனா காலம் போல நினைத்துக் கொள்ளுங்கள்' என்று அவரே சொல்லி விட்டாரே.
பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு என விலைவாசி எகிறுவது பற்றி எல்லாம் பிரதமர் மோடிக்கு எந்தக் காலத்திலும் கவலை இருந்தது இல்லை. போர்ச்சூழலில்தான் இதுபோன்ற நெருக்கடிகள் இருக்கிறதா என்ன? எப்போதுமே இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு இதெல்லாம் பிரச்சினைகள் அல்ல. வகுப்புவாதம், மக்களைப் பிரிப்பது இவை மட்டும்தான் நோக்கம்.
மக்களுக்கான திட்டங்கள், கூட்டணிக் கணக்குகள், பரப்புரை வியூகம் போன்றவற்றால் தேர்தல் களம் திமுகவுக்குச் சாதகமாக இருப்பதுபோல் சில கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. மத்திய பாஜக அரசின் மூலம் ஏதேனும் நெருக்கடி ஏற்படுத்தப்பட்டு களநிலவரம் திசை மாற வாய்ப்பிருப்பதாகக் கருதுகிறீர்களா?
அப்படி எதுவும் இனி நடக்காது என்று நினைக்கிறேன். பாஜக அப்படி எந்த நெருக்கடி கொடுத்தாலும் சந்திப்போம்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் திமுகவுக்கு என்ன சிக்கல் என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. மத்திய அரசு பாராமுகம் காட்டினாலும், தமிழக அரசு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி இதை ஏன் உடனடியாகச் செய்யவில்லை?
சாதிவாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும். மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டம், அதாவது, Census Act 1948-ன் கீழ் மத்திய அரசு தான் இந்தப் பணியைச் செய்யவேண்டும். மாநில அரசால் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த முடியாது. சமூக பொருளாதாரப் புள்ளிவிவரங்களை மட்டுமே எடுக்க முடியும்.
2008-ம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் சட்டத்தின்கீழ் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மாநில அரசுகள் மேற்கொள்ள இயலாது. சர்வே என்ற பெயரில் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பது வேறு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது வேறு. மாநில அரசுகள் சர்வே மட்டும்தான் எடுக்க முடியும். மத்திய அரசுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க முடியும். அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 246-ன்படி மக்கள்தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. எனவே, இதில் மாநில அரசு மீது வருத்தப்படுவது நியாயமல்ல.
பகுத்தறிவு பேசும் திமுக ஆட்சியில் கோயில் திருப்பணிகள் இவ்வளவு தீவிரமாக நடப்பது ஆன்மீக அக்கறையா அல்லது ‘இந்து எதிர்ப்பு' பிம்பத்தை மாற்றி, பாஜகவின் மத அரசியலை எதிர்கொள்ள நீங்கள் கையாளும் உத்தியா?
இது அனைவருக்குமான அரசு. அதில் பக்தர்களும் அடக்கம் தானே? அனைத்துத் துறை வளர்ச்சி என்று சொன்னால், அதில் அறநிலையத் துறையையும் சேர்த்துதானே வளர்க்க வேண்டும். அதைத்தான் செய்துள்ளோம். கோயில் பணிகளைச் செய்யாமல் போயிருந்தால், ஏன் கோயில்களை நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்றுதானே கேட்பீர்கள்?
பாஜகவின் மதவாத அரசியலுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பாஜகவுக்கும் கோயிலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கோயில்கள் மீது உண்மையான அக்கறை கொண்டது பாஜக எனில், இத்தனை திருப்பணிகள் நடந்திருப்பதை அவர்கள் பாராட்டி இருக்க வேண்டாமா? அவர்களது நோக்கம் மதத்தை வைத்து அரசியல் செய்வது. நாங்கள் மதத்தை வைத்து அரசியல் செய்வதற்காக திருப்பணிகள் செய்யவில்லை. பக்தர்கள் மனம் மகிழ்ந்தால் போதும் என்று எங்கள் கடமையைச் செய்கிறோம்.
அதிமுக, பாஜக, தவெக... இந்தத் தேர்தல் களத்தில் உங்களின் பிரதான எதிரியாக யாரைப் பார்க்கிறீர்கள்?
பொதுவாக நான் யாரையும் எதிரியாகப் பார்க்கும் இயல்பு கொண்டவன் அல்ல.
நீங்கள் பரப்புரைக்குச் செல்லும் இடங்களிலும், உதயநிதி செல்லும் இடங்களிலும் பெரும் கூட்டம் திரள்வதாகத் தெரிகிறது. கூட்டத்தை வைத்து வெற்றி / தோல்வியை கருணாநிதி கணித்து விடுவார் என்பார்கள். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய உங்கள் கணிப்பு என்ன?
200 தொகுதிகளைத் தாண்டி வெற்றி பெறுவோம் என்பதுதான் என்னுடைய கணிப்பு. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.