“கருணாநிதியின் ஞானமும், ஜெயலலிதாவின் வேகமும் ஸ்டாலினிடம் உள்ளது” - ஓபிஎஸ் பேச்சு

மதுரையில் நடந்த ஆதரவாளர்கள் இணைப்பு விழாவில் பெருமிதம்
மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு செங்கோல் பரிசளித்த ஓபிஎஸ்

மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு செங்கோல் பரிசளித்த ஓபிஎஸ்

படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

Updated on
2 min read

மதுரை: ‘‘கருணாநிதியின் ஞானமும், ஜெயலலிதாவின் வேகமும் ஸ்டாலினிடம் உள்ளது’’ என்று திமுகவுடன் ஆதரவாளர்களை இணைக்கும் மதுரை விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ராயப்பாளையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் விழா நடந்தது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இணைந்தனர். இவ்விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசியது:

“என்னுடைய 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் நான் ஏற்றுக் கொண்ட தலைமைக்கு விசுவாசமாகவும், கொண்ட கொள்கைக்கு நேர்மையாகவும், கொடுத்த பணிக்கு மனசாட்சியாகவும் நன்றியுடன் பணியாற்றி வந்துள்ளேன். நான் இருந்த இயக்கத்தில் எனக்கென்று ஒரு தனி அணியை உருவாக்க எண்ணியதில்லை. கட்சியின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு என் கடமையை ஆற்றி வந்திருக்கிறேன்.

எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக இன்று, அதிமுகவாக இல்லை. தொண்டர்கள்தான் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற திருத்தக்கூடாத கட்சி விதிகளை திருத்தனர். தொண்டர்கள் உரிமைகள் பறித்தனர். ஜெயலலிதா வழிநடத்திய, வளர்த்த அதிமுக இன்று இல்லை. தனக்கான, தனது பதவியை மட்டுமே குறியாக கொண்ட ஒருவரின் சுயநல அரசியலால் எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக இன்று அபகரிப்பு திமுகவாக மாறிவிட்டது.

பெரியாரின் திராவிட சிந்தாந்ததிற்கு எதிராகவும், அண்ணாவின் சமூக நீதிக்கு முரணாகவும் செயல்பட்டு வருகிறது. பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்க சட்டப் போராட்டங்களை நடத்தினேன். தலைமைக்கு உண்மையாக உழைத்திற்கும், விசுவாசமாக நடந்து கொண்டதிற்காகவும் குறுக்கு வழியில் வந்தவர்களால் நான் எப்படியெல்லாம் பழிவாங்கப்பட்டேன் என்பது அனைவருக்கும் தெரியும்.

அப்படி பழிவாங்கப்பட்ட என்னை, முதல்வர் ஸ்டாலின் அன்போடு அழைத்து பண்போடு பாசம் காட்டி, ஜெயலலிதாவின் அரவணைப்பை எனக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் வழங்கியுள்ளார்.

சட்டத்தை வளைத்து, திட்டம் போடலாம். கட்சி விதிகளை மாற்றி வட்டமும் போடலாம். தொண்டர்கள் உரிமைகளை பறித்துவிட்டு தொண்டை கிழிய கத்தலாம். கட்சியை கைப்பற்றலாம். ஆனால், வெற்றிபெற முடியுமா என்றால் இல்லை. தொடர் தோல்விதான் தொடர்கதையாக இருக்கிறது. இனியும், அவர்கள் தோல்வி தொடர்ந்து கொண்டு இருக்கும்.

எட்டு தோல்வி, 10 தோல்வி அல்ல, வாழ்நாள் முழுவதும் தோல்விகளைதான் காண போகிறார்கள். இனிமேலும் அந்த இயக்கத்தில் பயணிப்பது தன்மைானத்திற்கு கேடானது, திராவிட அரசியலுக்கு மாறானது என்பதை உணர்ந்துதான் திமுகவில் இணைந்துள்ளேன்.

75 ஆண்டுகளுக்கு மேலக திராவிட சித்தாந்தத்தையும், சமூக நீதியையும் தடம் பிறளாமல் காட்டும் திமுகவை தலைமையேற்று ஸ்டாலின் சிறப்பாக வழிநடத்துகிறார். அவரது தலைமையை ஏற்று, தாய் கழகமான திமுகவில் ஒரு தொண்டனாக இணைந்துளேன்.

இவ்விழாவில் நான் நடத்தி வந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தையும் அண்ணா கண்ட திமுவுடன் இணைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தாய் கழகத்தில் இணைந்ததை பெருமையாக கருதுகிறேன். மாற்றான் தோட்டத்தின் மல்லிகைக்கும் மனம் உண்டு என்று அண்ணா சொன்னார். அவரது கருத்தை அப்படியே ஏற்று என்னையும், என்னுடன் பயணித்தவர்களையும் அன்போடு அரணைத்து முதல்வர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

கருணாநிதியின் தமிழ்மொழி பற்றையும், அரசியல் ஞானத்தையும், ஜெயலிதாவின் வேகத்தையும் ஒருங்கே பெற்றுள்ள ஸ்டாலினை தமிழகம் மட்டுமில்லாது இந்திய திருநாடே இன்று பாராட்டுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் தேசியம் என்ற பெயரில் மதவாதம் என்பது வெற்று பேச்சு. இன்று இப்போது, எப்போதுமே திராவிடமே. நம்முடைய இந்த இணைப்பு சிலருக்கு வெறுப்பை தந்திருக்கிறது. சிலருக்கு தூக்கத்தையும் கெடுத்து இருக்கிறது. எதிர் அணியினரின் வெற்றி வாய்ப்பை முற்றிலும் தடுத்து இருக்கிறது. அதற்கு மூல காரணமாக இருப்பவர் ஸ்டாலின்.

கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை எதிரிகளே இல்லை என்ற சொல்லை நடைமுறைப்படுத்தியவர், பதறாத பண்பாளர், சிதறாத சிந்தனையாளர், கட்சியை மட்டுமில்லை, ஆட்சியையும் சிறப்பாக ஸ்டாலின் வழி நடத்துகிறார். தோழமை கட்சிகளையும் மான்போடு நடத்துகிற இவரை போன்ற பக்குவமுள்ள தலைவர் இந்தியாவிலேயே இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

மக்களுக்கு என்ன தேவையோ, அதனை அரசு மூலம் பல்வேறு திட்டங்கள் மூலம் நிறைவேற்றி கொண்டிருக்கிறார். மக்கள் நலதிட்டங்களையும், ஜீவா ஆதர உரிமைகளையும் மக்களுக்கு பெற்று தருவதில் இந்தியாவிலே தலைசிறந்த முதல்வராக ஸ்டாலின் திகழ்கிறார்” என்று அவர் பேசினார்.

<div class="paragraphs"><p>மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு செங்கோல் பரிசளித்த ஓபிஎஸ் </p></div>
மாதம் ரூ.2.500, திருமணத்துக்கு ஒரு பவுன்... - மகளிருக்கான தவெக தலைவர் விஜய்யின் வாக்குறுதி பட்டியல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in