

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதியில் நடைப் பயிற்சி மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைப் பயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். கலைஞரின் கனவு இல்லம் திட்டம், அரசுப் பேருந்தில் மகளிர் விடியல் பயணம் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக, வேலூருக்கு நேற்று முன்தினம் இரவு ஸ்டாலின் வந்தார்.
தனியார் ஓட்டலில் தங்கியிருந்த அவர், கே.வி.குப்பம் பகுதியில் நேற்று காலை நடைப் பயிற்சி மேற்கொண்டார். அப்போது, தொகுதி வேட்பாளர் டாக்டர் ராஜேஸ்வரி, கதிர் ஆனந்த் எம்.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கே.வி.குப்பம் பேருந்து நிலையம் மற்றும் அருகில் உள்ள தெருக்களில் நடந்து சென்ற முதல்வர் திமுக வேட்பாளர் டாக்டர் ராஜேஸ்வரிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, ஔவை நகரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பயனாளி ஷீலா என்ற பெண்ணின் வீட்டிற்குச் சென்று அவர்களிடம் நலம் விசாரித்தார். அவரிடம், மகளிர் உரிமத்தொகை முறையாக வருகிறதா? திமுக வழங்க இருக்கும் ரூ.8000-க்கான கூப்பனில் எந்த பொருள் வாங்கத் திட்டம் வைத்திருக்கிறீர்கள் என கேள்விகளை முதல்வர் உரையாடினார்.
பின்னர், ஷீலாவின் மகனிடம் ‘காலை உணவுத் திட்டத்தில் சாப்பிடுகிறீர்களா? நன்றாகப் படிக்க வேண்டும். இதற்காகத்தான் காலை உணவு வழங்கப்படுகிறது’ என கூறினார். கே.வி.குப்பம் பகுதியில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததுடன், காவல் நிலையம் எதிரேயுள்ள கடையில் ஸ்டாலின் தேநீர் அருந்தினார்.
அங்கிருந்து கே.வி.குப்பம் பேருந்து நிலையம் சென்றவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தில் மகளிர் விடியல் பயணம் குறித்து பெண்களிடம் கேட்டறிந்தார். நடைப் பயிற்சியை முடித்துக்கொண்டு வேலூர் திரும்பும்போது காட்பாடி விருதம்பட்டு பகுதியில் உள்ள அம்பேத்கரின் முழு உருவச் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரோடு சேர்ந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டில் தொகுதி மறு சீரமைப்பின்படி கே.வி.குப்பம் (தனி) தொகுதி கடந்த 2008-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2011-ல் முதல் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செ.கு.தமிழரசன் வெற்றி பெற்றார். 2016-ல் நடைபெற்ற இரண்டாவது தேர்தலில் அதிமுக வேட்பாளர் லோகநாதன், 2021-ல் நடைபெற்ற மூன்றாவது தேர்தலில் அதிமுக சார்பில் பூவை எம்.ஜெகன்மூர்த்தி போட்டியிட்டு வெற்றிபெற்றனர். இந்த தொகுதியை திமுகவால் இதுவரை வெல்ல முடியவில்லை.
எனவே, இந்த தேர்தலில் கே.வி.குப்பம் (தனி) தொகுதியை எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்பு திமுகவினர் மத்தியில் உள்ளது. இந்த முறை திமுக வேட்பாளராக டாக்டர் ராஜேஸ்வரியும் அதிமுகவில் மீண்டும் பூவை எம்.ஜெகன்மூர்த்தியும் போட்டியிடுகின்றனர். எனவே, கே.வி.குப்பம் (தனி) தொகுதியை திமுக வசமாக்கும் திட்டத்துடன் கே.வி.குப்பத்தில் நடைப்பயிற்சி மூலம் முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டதாக திமுகவினர் கூறுகின்றனர்.
இந்த ‘டிஸ்கஷன்’தான் ஓடுகிறது!- மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: கே.வி.குப்பம் தொகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளி ஒருவரின் வீட்டுக்குச் சென்றேன். மகளிர் உரிமைத் தொகை திட்டத்திலும் அந்தச் சகோதரி மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார். அவரது குழந்தைகளும் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் பயனடைவதாகச் சொல்லி மகிழ்ந்தார்.
அவரிடம் “அடுத்து, இல்லத்தரசி ரூ.8,000-க்கான கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?” என கேட்டேன். 2026 தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்பாகவே, இல்லத்தரசி ரூ.8,000 கூப்பனில் வீட்டுக்கு என்ன பொருள் வாங்கலாம்? எந்தக் கடையில் வாங்கலாம்? என்ற திட்டங்கள் தொடங்கிவிட்டன. தமிழகம் முழுக்க குடும்பங்களில் இப்போது இந்த ‘டிஸ்கஷன்’தான் ஓடுகிறது. வீட்டுக்கு தேவையான எந்தப் பொருளையும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
அதேநேரம் அது முழுக்க முழுக்க என் சகோதரிகளின் தேர்வாகவே இருக்கணும். அவர்கள்தான் இல்லத்து அரசிகள், குடும்பத் தலைவிகள். பெண்கள்தான் எப்பவுமே வெல்லணும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.