வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: தமிழர்களுக்காக அவசர உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை: வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்ற சூழலை கருத்தில்கொண்டு, அங்குள்ள தமிழர்களின் அவசர உதவிக்காக உதவி எண்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக, ஈரான் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடாநாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு கருதி, தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், இந்திய தூதரகம் வழங்கும் அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றி வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்குமாறும் இந்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.
தமிழக முதல்வர் என்ற முறையில், வளைகுடா நாடுகளில் வசித்து வரும் நம் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலை அடைந்துள்ளேன். அவர்களின் நிலைமையை உடனுக்குடன் கண்காணித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அங்குள்ள தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.
இதற்காக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமிழர்கள் அல்லது தமிழகத்தில் உள்ள அவர்களது குடும்பத்தினர் ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், தமிழக அரசின் 24 மணி நேர கட்டணமில்லா உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
அதன்படி, இந்தியாவுக்குள் இருப்பவர்கள் 1800 309 3793 என்ற எண்ணையும், வெளிநாடுகளில் இருப்பவர்கள் +91 80 6900 9900 மற்றும் +91 80 6900 9901 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம். மேலும், டெல்லி கட்டுப்பாட்டு அறையை 011-24193300 மற்றும் 92895 16712 (வாட்ஸ்-அப்) ஆகிய எண்கள் மூலம் தொடர்பு கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
