

படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி: புதுச்சேரியில் தேர்தல் குறித்து பாஜக தரப்பில் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தபோது, ஆளுநர் தலையீடு உள்ளிட்ட பிரச்சினைகளை அம்மாநில முதல்வர் ரங்கசாமி சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.
புதுவை முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, பாஜக மாநிலத் தலைவர் வி.பி;ராமலிங்கம் ஆகியோர் இன்று சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் என்.ஆர்.காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயபாலும் உடனிருந்தார்.
கூட்டத்தில் நடந்தவை தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, “தொகுதி பங்கீடு தொடர்பாக பேச பாஜகவினர் வந்தனர். வரும் தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட விருப்பம் இருப்பதாக முதல்வரிடம் பாஜகவினர் தெரிவித்தனர்.
இப்போது இதற்கு அவசரம் இல்லை. ஆட்சி நிர்வாகத்தில் தான் சந்திக்கும் பிரச்சினைகள், தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் உள்ள தொந்தரவுகளையும் வெளிப்படையாக நிர்மல் குமார் சுரானாவிடம் முதல்வர் ரங்கசாமி பகிர்ந்துள்ளார். குறிப்பாக ஆளுநர், தலைமைச்செயலர், அதிகாரிகள் ஆகியோரின் தலையீடுகளையும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள சூழலில் ஆட்சியில் என்னென்ன பிரச்சினைகளை சந்தித்து வருவதையும் முழுமையாக தெரிவித்துள்ளார். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவேண்டும். அதில் பிரச்சினை இருக்கிறது. அதன்பிறகு டெல்லியில் இருப்போருடன் பேசலாம். இது தொடர்பாக ஜனவரியில் அடுத்தக்கூட்டம் தொடர்பாக பார்த்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டு அனுப்பி வைத்தார்” என்று தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பாஜக மேலிடப்பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவிடம் கேட்டதற்கு, “மரியாதை நிமித்தமான சந்திப்புதான். அரசியல்தான் பேசினோம். பாஜகவில் எந்த குழப்பமும் இல்லை. விஜய் ரோடு ஷோ அனுமதிப்பது தொடர்பாக அரசு தரப்பில்தான் முடிவு எடுப்பார்கள். பாஜகவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. என்டிஏ அரசில் பாஜக இருந்தாலும் முதல்வர்தான் முடிவு எடுப்பார்.
வரும் தேர்தலிலும் 100 சதவீதம் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி தொடரும். அனைத்து பாஜ எம்எல்ஏக்களும் என்டிஏ அரசுக்கு ஆதரவு தருகிறார்கள். எந்த பாஜக எம்எல்ஏவும் என்டிஏ அரசுக்கு எதிர்ப்பாக இல்லை. பத்திரிக்கையாளர்கள்தான் சந்தேகப்படுகிறார்கள்” என்றார்.