

கரூர் வேலுசாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு | கோப்புப் படம்
புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், “கரூர் கூட்ட நெரிசல் வழக்கை மத்திய புலனாய்வு பிரிவுக்கு (சிபிஐ) மாற்றிய அக்.13ம் தேதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த உத்தரவு மாநிலத்தின் சுயாட்சியை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது. மேலும், ஆபத்தான முன்னுதாரணத்தை அமைக்கிறது.
தமிழக காவல்துறையின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், அரசியல் உள்நோக்கங்களைக் காரணமாகக் குறிப்பிட்டு உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளது. மேலோட்டமான அரசியல் குற்றச்சாட்டுகள், சிபிஐக்கு மாற்றுவதை நியாயப்படுத்த முடியாது. மத்தியிலும் மாநிலத்திலும் வெவ்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சி செய்யும் ஒரு கூட்டாட்சி அரசியலில், அரசியல் உள்நோக்கம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பொதுவானவை.
அரசியல் உள்நோக்கங்கள், சிபிஐ தலையீட்டுக்கு போதுமான காரணமாக மாறினால், மத்திய புலனாய்வு அமைப்புகளை அரசியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் பெருகிவிடும். இந்த இடைக்கால உத்தரவு, அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு வழக்கையும் மாநில அதிகார வரம்பிலிருந்து நீக்குவதற்கு ஓர் ஆபத்தான முன்னுதாரணத்தை அமைக்கிறது. இது கூட்டாட்சி அமைப்புக்கு முரணானது.
தமிழக காவல்துறையின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு, சென்னை உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டது. வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக இது ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்பட்டது. இது விசாரணையின் சுதந்திரத்துக்கும் கூட்டாட்சி அமைப்புக்கான மரியாதைக்கும் இடையில் மிகவும் பொருத்தமான சமநிலையைக் கொண்டிருக்கிறது. அசாதாரண அதிகார வரம்பைப் பயன்படுத்தி விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதற்கான நிரூபிக்கக்கூடிய காரணம் ஏதும் இல்லை.
அக்.13 அன்று வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற உத்தரவில், தமிழகத்தைச் சேராத இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இதில் இடம்பெற வேண்டும் என்று தெரிவித்திருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் இயல்பாகவே பாரபட்சமாக செயல்படுபவர்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையிலான இந்த உத்தரவு, அகில இந்திய சேவைகளின் நேர்மையை அவமதிப்பதாகும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.